புத்தாண்டு கொண்டாட்டத்தில் கொடூரம் - கோவா சென்று திரும்புகையில் நடந்த கார் விபத்தில் 4 தமிழர்கள் பலி... கர்வார்(கர்நாடகா): உத்தர கன்னடா மாவட்டத்தில், அன்கோலா தேசிய நெடுஞ்சாலையில் சென்ற கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பைத் தாண்டி எதிர்திசையில் வந்த அரசுப் பேருந்தின் மோதி விபத்துக்குள்ளானது.
மோதிய வேகத்தில் பலத்த சேதமான நிலையில், காரில் பயணித்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றொருவர் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீசார், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக கோவா சென்று, திரும்பியபோது அதிவேகம் காரணமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கார் விபத்துக்குள்ளானதாக தெரிவித்தனர்.
மேலும் உயிரிழந்த அனைவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளதாக போலீசார் கூறினர். கோவாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு கர்நாடகா வழியாக வந்தபோது விபத்து நிகழ்ந்ததாக போலீசார் தெரிவித்தனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:ராஜஸ்தானில் லாரி மோதியதில் 5 பேர் உயிரிழப்பு