ஹைதராபாத்:நடிகர் ரஜினிகாந்தின் "ஜெயிலர்" திரைப்படம் கடந்த 10ஆம் தேதி வெளியானது. இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. ஜெயிலர் படத்தை ரஜினிகாந்த் ரசிகர்கள் கொண்டாடி வந்தனர். இந்த சூழலில், ஜெயிலர் படம் வெளியாவதற்கு முன்னரே நடிகர் ரஜினிகாந்த், இமயமலை உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களுக்கு ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
இமயமலைப் பயணத்தை முடித்த ரஜினிகாந்த், லக்னோ வந்தார். அங்கு, உத்தரபிரதேச துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத்துடன் இணைந்து ஜெயிலர் படத்தைப் பார்த்தார். அதைத் தொடர்ந்து நேற்று(ஆகஸ்ட் 19) மாலையில் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் வீட்டிற்கு சென்றார். ரஜினிகாந்த்தை வரவேற்க யோகி ஆதித்யநாத் வாசலில் நின்றிருந்தார். அப்போது, ரஜினிகாந்த் யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்து வணங்கினார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த வீடியோவைப் பார்த்த ரஜினி ரசிகர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். இதையடுத்து, ரஜினிகாந்த் யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்த சம்பவத்தை பல்வேறு தரப்பினரும் கடுமையாக விமர்சித்தனர். ரஜினி சுயமரியாதையை விட்டு யோகி ஆதித்யநாத் காலில் விழுந்துவிட்டதாக கடுமையாக விமர்சித்தனர். ஜெயிலர் படத்திற்காக ரஜினியை கொண்டாடிய அனைவரும், தற்போது மீம்ஸ் போட்டு அவரைக் கலாய்த்து வருகின்றனர்.
இந்த நிலையில், ரஜினிகாந்த் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவை இன்று சந்தித்தார். லக்னோவில் உள்ள அகிலேஷ் யாதவின் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்துப் பேசினார். பின்னர், அகிலேஷ் யாதவின் தந்தை முலாயம் சிங் யாதவின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், தான் அகிலேஷ் யாதவை ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் சந்தித்ததாகவும், அன்று முதல் தாங்கள் நண்பர்களாக இருந்ததாகவும், செல்போனில் அடிக்கடி பேசி வந்ததாகவும் தெரிவித்தார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு லக்னோவுக்கு படப்பிடிப்பிற்காக வந்தபோது அகிலேஷ் யாதவை சந்திக்க முடியவில்லை என்றும், தற்போது அவர் வீட்டில் இருந்ததால் சந்தித்ததாகவும் தெரிவித்தார்.
இந்த சந்திப்பு தொடர்பாக அகிலேஷ் யாதவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இருவரும் கட்டித் தழுவிக் கொண்டிருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ள அகிலேஷ் அதில், "மைசூரில் பொறியியல் படிக்கும்போது ரஜினிகாந்தை திரையில் பார்த்த மகிழ்ச்சி இன்னும் அப்படியே இருக்கிறது. நாங்கள் 9 ஆண்டுகளுக்கு முன்பு நேரில் சந்தித்தோம், அன்றிலிருந்து நண்பர்களாக இருக்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியை ரஜினிகாந்த் சந்திக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து வணங்கிய ரஜினிகாந்த்.. சமூகவலைதளங்களில் ரசிகர்கள் விமர்சனம்!