வாட்ஸ்அப், ஃபேஸ்புக் ஆகியவை ஒன்றிய அரசின் விதிமுறைகளை ஏற்ற நிலையில், ட்விட்டர் ஏற்க மறுத்தது.
"மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தை ஒவ்வொரு கட்டத்திலும் முன்னேற்றம் குறித்து தெரிவிக்கிறோம். மேலும் விவரங்கள் விரைவில் அமைச்சகத்துடன் பகிரப்படும். புதிய வழிகாட்டுதல்களுக்கு இணங்க ட்விட்டர் தொடர்ந்து அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுவருகிறது "என்று ட்விட்டர் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு இணங்காததால், இந்தியாவில் சட்டப்பாதுகாப்பை ட்விட்டர் இழந்துவிட்டதாக இன்று அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன.
இப்போது, இதனால், தனிநபர் கருத்தும் ட்விட்டர் கருத்தாகவே இனி பார்க்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. புதிய சட்டங்களைப் பின்பற்றாத பிரதான சமூக வலைதளங்களில் ஒரே வலைதளம் ட்விட்டர் மட்டுமே.
சமூக ஊடக நிறுவனங்கள் தொடர்பான புதிய விதிகளுக்கு இணங்க ட்விட்டருக்கு கடைசி அறிவிப்பை வழங்கியதாக ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஜூன் 5 அன்று கூறியது. புதிய இடைநிலை வழிகாட்டுதல் விதிகள் மே 26 முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக அமைச்சகம் கடிதத்தில் தெரிவித்துள்ளது.
சமூக ஊடகங்களுக்கான விதிகள் ஏற்கனவே மே 26 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன, இது ஒரு வாரத்திற்கும் மேலாகிவிட்டது. ஆனால் ட்விட்டர் இந்த விதிகளுக்கு இணங்க மறுத்துவிட்டது. தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000இன் பிரிவு 79இன் கீழ் கிடைக்கும் சட்டப் பாதுகாப்பிலிருந்து ட்விட்டர் விலக்கு பெறும்.