ஹைதராபாத்:சூரியனின் புறவெளியை ஆய்வு செய்ய திட்டமிட்ட இஸ்ரோ ஆதித்யா L1 விண்கலத்தை, பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து கடந்த செப்டம்பர் 2 அன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
ஆதித்யா L1 விண்கலம், 110 நாள்கள் பயணமாக சூரியனின் L1 பகுதிக்குச் சென்றடையும் என இஸ்ரோ தெரிவித்திருந்தது. மேலும், பூமியில் இருந்து 15 லட்சம் கி.மீ தூரம் பயணித்து சூரியனின் L1 புள்ளியின் சுற்றுவட்டப் பாதையை அடைந்து, அங்கிருந்து சூரியனை ஆய்வு செய்யும் என இஸ்ரோ அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், L1 புள்ளியை நோக்கிப் பயணிக்கும் ஆதித்யா விண்கலம், விண்வெளியில் இருக்கும் காற்றில் உள்ள துகள்கள், அயனிகள் குறித்து ஆய்வு செய்யத் தொடங்கி உள்ளது என இஸ்ரோ ஏற்கனவே அறிவித்தது. மேலும், ஆதித்யா விண்கலம் இந்த ஆய்வை தன் வாழ்நாள் முழுவதும் தொடரும் எனவும் மூத்த வானியல் இயற்பியலாளர்கள் தெரிவித்தனர்.