டெல்லி: அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம், கடந்த ஜனவரி 27 அன்று அதானி குழுமம் மீதான அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தது. முக்கியமாக, தங்களை உயர்த்தி காட்டுவதற்காக அதானி பங்குகள் மோசடியில் ஈடுபட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இதனால் அதானி குழுமத்தின் பங்குகள் 20 சதவீதம் வரை சரிந்ததில், ரூ.4.17 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டது. இதற்கு அதானி தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் 413 பக்கங்கள் கொண்ட அறிக்கையை அதானி குழுமம் நேற்று (ஜன.29) வெளியிட்டது.
இதில் இந்தியா மற்றும் அதன் அமைப்புகள், வளர்ச்சி மீது நிகழ்த்தப்பட்டுள்ள திட்டமிட்ட வர்த்தக தாக்குதல் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று (ஜன.30) காலை முதலே அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் 10 சதவீதம் உயர்ந்துள்ளது. பிஎஸ்இயின் படி, அதானி எண்டர்பிரைசஸ் 10 சதவீதம் உயர்ந்து ரூ.3,038.35 ஆகவும், அதானி போர்ட்ஸ் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம் ஆகியவை 10 சதவீதம் உயர்ந்து ரூ.658.45 ஆகவும் உள்ளது.