பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தின் ட்விட்டர் கணக்கு மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. தமிழில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ’தாம் தூம்’ படத்தின் மூலம் பிரபலமானவர், நடிகை கங்கனா ரனாவத்.
தொடர்ந்து தமிழ் உள்ளிட்டப் பல்வேறு மொழிப் படங்களில் நடத்து வந்தார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று கதையான ’தலைவி’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழக மக்களிடையே மிகவும் பரீட்சையமானார்.
தொடர்ந்து பா.ஜ.க.விற்கு ஆதரவாக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார். இதனால் இவருக்கும், உத்தவ் தாக்கரே தலையிலான அப்போதையை மராட்டிய அரசுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து மேற்கு வங்கத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்கவைத்தது.
இந்த தேர்தல் முடிவுகள் தொடர்பாக கங்கனா ரனாவத் வெளியிட்ட கருத்துகள் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பின. பல்வேறு சர்ச்சைக் கருத்துகளை வெளியிட்டதாக கங்கனா ரனாவத்தின் ட்விட்டர் கணக்கை கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதம் நிரந்தரமாக முடக்கி ட்விட்டர் நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டது.
இதற்கும் நடிகை கங்கனா ரனாவத் கடும் எதிர்ப்புத் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு கங்கனா ரனாவத்தின் ட்விட்டர் கணக்கு முடக்கம் ரத்து செய்யப்பட்டு மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடிகை கங்கனா ரனாவத் தன் ட்விட்டர் பக்கத்தில் "அனைவருக்கும் வணக்கம், மீண்டும் இங்கு வந்ததில் மகிழ்ச்சி" எனப் பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்து அவர், இந்திரா காந்தி வேடத்தில் நடித்து விரைவில் வெளியாக உள்ள எமர்ஜென்சி படத்தின் படபிடிப்பு நிறைவுபெற்றதாக தெரிவித்த கங்கனா, படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட காட்சிகளை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். வரும் அக்டோபர் 20ஆம் தேதி எமர்ஜென்சி படம் திரைக்கு வர உள்ளதாக நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே நடிகை கங்கனாவின் ட்விட்டர் மறுபிரவேசத்திற்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகர், நடிகைகள், ரசிகர்கள் தொடர்ந்து நடிகை கங்கனா ரனாவத்திற்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர். மேலும் கங்கனாவின் ட்விட்டர் கணக்கு தற்போது டிரெண்டாகி வருகிறது.
இதையும் படிங்க:குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை:தமிழ்நாடு அலங்கார ஊர்திக்கு அனுமதி - பெண்களுக்கே முக்கியத்துவம்!