ஐதராபாத் :நடிகர் பிரபாஸ் நடிப்பில் தயாராகி உள்ள ஆதிபுருஷ் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் ஓம் ராவத் இந்தப் படத்தை இயக்கி உள்ளார். இதிகாச கதைகளில் ஒன்றான ராமாயணத்தை மையமாகக் கொண்டு உருவாகி உள்ள இந்தப் படத்தில் நடிகர் பிரபாஸ் ராமனாக நடித்துள்ளார்.
அவருக்கு ஜோடியாக சீதை கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் நடித்து உள்ளார். மேலும் இராவணனாக பாலிவுட் நடிகர் சயிப் அலிகானும், லட்சுமணனாக பாலிவுட் நடிகர் சன்னி சிங் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். ஆதி புருஷ் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் தயாராகி உள்ளது.
கடந்த ஆண்டு இந்தப் படத்தின் டீசர் வெளியான நிலையில், கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது. அனிமேஷன் படமான ஆதிபுருஷ் படத்தில் கிராஃபிக்ஸ் காட்சிகள் சுமாராக இருப்பதாகவும், அனிமேஷன் காட்சிகள் மிக மோசமாக இருப்பதாகவும் கூறி ரசிகர்கள் விமர்சித்தனர். இதனால், இந்தப் படத்தை மீண்டும் மெருகேற்றும் பணியில் படக்குழு ஈடுபடத் தொடங்கியது.
அதனால், ஆதிபுருஷ் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. இதனிடையே, கடந்த ராம நவமி தினத்தன்று ஆதி புருஷ் திரைப்படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. சமூக வலைதளங்களில் போஸ்டர் வைரலான நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியது. இந்நிலையில் பல கட்ட கிராஃபிக்ஸ் மற்றும் அனிமேஷன் பணிகள் நிறைவுபெற்று படத்தின் டிரெய்லர் இன்று (மே. 9) வெளியாகி உள்ளது.