புதுச்சேரி: கிழக்கு கடற்கரை சாலை காலாப்பட்டு பகுதியில் சாசன் என்ற பெயரில் இயங்கிய மாத்திரை தயாரிக்கும் நிறுவனம், சோலாரா ஆக்டிவ் பார்மா என்ற பெயரில் ரசாயன தொழிற்சாலை ஒன்றை இயக்கி வருகிறது. ஒரு ஷிப்ட்டிற்கு 300 பேர் என வேலை செய்யும் சூழ்நிலையில் நேற்று (4ஆம் தேதி) இரவு ஷிப்ட் முடிந்து தொழிலாளர்கள் மாறும் நேரத்தில் தொழிற்சாலையில் தெற்கு பக்கம் உள்ள கட்டிடத்தில் 3 கொதிகலன்கள் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.
எப்போதும் 50க்கும் மேற்பட்டோர் பணியாற்றும் சூழ்நிலையில் ஷிப்ட் மாற்றும் நேரத்திற்கு உள்ளே வந்த 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வெடி விபத்தில் பாதிக்கப்பட்டு வெளியே ஓடி வந்தனர். உடனே அவர்களுக்கு முதலுதவி அளித்து ஆம்புலன்ஸ் வாகனங்கள் வர வரவழைக்கப்பட்டு ப்பிம்ஸ் மற்றும் ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும், தொழிற்சாலை நிர்வாகத்தின் சார்பில் காலாப்பட்டு காவல்துறையினருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டு 5க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வரவழக்கப்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டனர்.
கிட்டத்தட்ட 5 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஆனால் ரசாயன புகையை கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே தகவல் அறிந்து தொழிற்சாலைக்குள் வந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நிர்வாகத்தை கண்டித்து விபத்து நடந்த கட்டிடத்திற்கு சென்று அங்குள்ள கண்ணாடிகளை அடித்து நொருக்கியதாக கூறப்படுகிறது.
இந்த தகவல் அறிந்து 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இருப்பினும் பொதுமக்கள் வாயிற் கதவு அருகே நின்று கொண்டு நிர்வாகத்திற்கு எதிராக கோஷமிட்டனர். சம்பவ இடத்திற்கு காலாப்பட்டு சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம், அதிமுக மாநில செயலாளர் அன்பழகன், வன்னியர் பேரவை தலைவர் செந்தில் ஆகியோர் வந்து விவரங்களை கேட்டறிந்தனர்.
இப்படி மக்களுக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய தொழிற்சாலையை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மேலும், ரசாயன தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய ரசாயன புகையால் கண் எரிவதாகவும், மூச்சுத்தினறல் ஏற்படுவதாகவும் கூறி அருகில் உள்ள சுனாமி குடியிருப்பில் இருந்த மீனவ மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி கடற்கரை கிராம பகுதிக்கு சென்றனர்.