டெல்லி: பணமோசடி வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முன்னாள் அமைச்சருமான சத்யேந்தர் ஜெயின், தலைசுற்றல் காரணமாக மயங்கி விழுந்ததை தொடர்ந்து, வியாழக்கிழமை தீன் தயாள் உபாத்யாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாகவும், ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருவதாக, மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
தலைநகர் டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி அரசு நடைபெற்று வருகிறது. டெல்லி அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் சத்யேந்திர ஜெயின். இவர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ், மத்திய புலனாய்வுத் துறை, கடந்த 2017இல் வழக்குப்பதிவு செய்தது.
இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வேளையில், இவர் மீது, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து அமலாக்கத் துறையும், இதுதொடர்பான விசாரணையில் களமிறங்கியது. இந்நிலையில் தான் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில், அமலாக்கத்துறை அதிகாரிகளால், சத்யேந்திர ஜெயின் அதிரடியாக கைது செய்யப்பட்டார். 2022ஆம் ஆண்டு, மே மாதம், சத்யேந்திர ஜெயின் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதில் உள்நோக்கம் இருப்பதாகவும், ஆம்ஆத்மி அரசுக்கு கெட்டப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் பாஜக அரசு மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் சத்யேந்திர ஜெயினை கைது செய்ததாக ஆம்ஆத்மி குற்றம் சாட்டியது.
இதற்கிடையே, சத்யேந்திர ஜெயின் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்தது. இந்நிலையில்,சத்யேந்திர ஜெயின் டெல்லியில் உள்ள தீன்தயாள் உபாத்யாய் மருத்துவமனையில் நேற்று (மே 24) இரவு அனுமதிக்கப்பட்டார். “திகார் சிறையின் குளியலறையில் தலைசுற்றல் காரணமாக அவர் மயங்கி விழுந்தார். இதற்கு முன்பும், சத்யேந்தர் ஜெயின் குளியலறையில் விழுந்து முதுகுத்தண்டில் பலத்த காயம் அடைந்து இருந்ததாக” ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.