தமிழ்நாடு

tamil nadu

நாடாளுமன்றத்தில் தொடர் அமளி! ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் சஸ்பெண்ட்!

By

Published : Jul 24, 2023, 4:06 PM IST

மணிப்பூர் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடி பதிலளிக்கக் கோரி மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டதாக ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. சஞ்சய் சிங்கை நடப்பு நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடரில் இருந்து இடை நீக்கம் செய்து சபாநாயகர் ஜெகதீப் தன்கர் உத்தரவிட்டார்.

AAP MP Sanjay Singh
AAP MP Sanjay Singh

டெல்லி : மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டதாக ஆம் ஆத்மி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங்கை நடப்பு மழைக் கால கூட்டத் தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்து மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் உத்தரவிட்டார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மணிப்பூர் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடி பேச வேண்டும் என்று இரு அவைகளிலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடந்த இரண்டு நாட்களாக நாடாளுமன்றத்தின் இரு அவை நடவடிக்கைகளும் முடங்கின.

இந்நிலையில், இன்று (ஜூலை. 24) மூன்றாவது நாளாக நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பாக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் ஆர்ப்பாட்டம் நடத்தின. தொடர்ந்து அவை தொடங்கியதும் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி பதிலளிக்கக் கோரி எதிர்க்கட்சி எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.

இதனால் அவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து அவை தொடங்கியதும் மீண்டும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடத் தொடங்கின. இதனால் மக்களவை மற்றும் மாநிலங்களவை மதியம் 2 மணி வரை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே எதிர்க்கட்சிகள் அமளியின் போது, மாநிலங்களவை சபாநாயகர் ஜெகதீப் தன்கர் இருக்கை அருகே ஆம் ஆத்மி நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங் வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

இதையடுத்து ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கை நடப்பு கூட்டத் தொடரில் இடை நீக்கம் செய்யும் தீர்மானத்தை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கொண்டு வந்தார். தீர்மானத்திற்கு அனுமதி அளித்த சபாநாயகர் ஜெகதீப் தன்கர், ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கை நடப்பு நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

முன்னதாக கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரிலும் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் இடை நீக்கம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. சபாநாயகர் இருக்கை அருகே சென்று அமளியில் ஈடுபட்டதாகவும், காகிதங்களை கிழித்து நாற்காலியை நோக்கி வீசியதாக கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரிலும் சஞ்சய் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க :Gyanvapi Case : தொல்லியல் துறை ஆய்வுக்கு இடைக்கால தடை - உச்சநீதிமன்றம் அதிரடி!

ABOUT THE AUTHOR

...view details