புதுடெல்லி: பிறப்பு சான்றுக்கான பட்டியலில் இருந்து ஆதாரை நீக்கும் படி வருங்கால வைப்பு நிதி அமைப்புக்கு (EPFO) இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) உத்தரவிட்டதைத் தொடர்ந்து, பிறப்பு சான்றுக்கான ஆவணமாக ஆதார் ஏற்றுக்கொள்ளப்படாது என வருங்கால வைப்பு நிதி அமைப்பு அறிவித்து உள்ளது.
இந்தியாவில் மத்திய மாநில அரசுகளால் வழங்கப்படும் அனைத்து சேவைகளும் ஆதாரை அடிப்படையாக வைத்தே மக்களுக்கு வழங்கப்படுகிறது. சிம் கார்ட் வாங்குவதில் தொடங்கி, வங்கிகளில் கடன் பெறுவது, அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறுவது வரை ஆதார் முக்கிய ஆவணமாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
இந்த நிலையில் பிறந்த தேதியை உறுதி செய்வதற்கு சமர்பிக்கப்படும் ஆவண பட்டியலில் இருந்து ஆதாரை நீக்கும் படி வருங்கால வைப்பு நிதி அமைப்புக்கு (EPFO - Employees provident Fund Organisation) இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI - Unique Identification Authority of India) அறிவுறுத்தி உள்ளது.
இதனை அடுத்து வருங்கால வைப்பு நிதி அமைப்பு கடந்த ஜன.16 ஆம் தேதி வெளியிட்ட சுற்றறிக்கையில், பிறந்த தேதிக்கான ஆதாரமாக ஏற்றுக்கொள்ளக் கூடிய ஆவணங்களில் இருந்து ஆதார் நீக்கப்படுகிறது என்றும், இந்திய தனித்துவ அடையான ஆணையத்தின் உத்தரவு படி இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் என கூறியுள்ளது.