ஹைதராபாத்: நாம் பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு போன்களில் டீஃபால்ட்டாக சில ஆப்கள் உள்ளன. அவற்றை நம்மால் நீக்க முடியாது. நமக்குப் பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் அந்த ஆப்கள் நமது போனில் இருக்கும். சர்ச் இன்ஜின் மார்க்கெட்டில் கூகுள் நிறுவனத்தின் ஆதிக்கம் காரணமாகவே, இதுபோன்ற டீஃபால்ட் ஆப்களை அந்நிறுவனம் பயனர்கள் மீது திணித்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
கூகுளின் இதுபோன்ற நடவடிக்கைகளால் பல தொழில்நுட்ப நிறுவனங்களில் வளர்ச்சிப் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக கூகுள் நிறுவனம் மீது புகார்களும் உள்ளன. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஆண்ட்ராய்டு மொபைல் சாதனத்தின் விருப்பத்தேர்வை தனக்குச் சாதகமாக பயன்படுத்தியதாக, கூகுள் நிறுவனத்திற்கு இந்தியப்போட்டி ஒழுங்குமுறை ஆணையம் (competition commission of india) சுமார் 1,337 கோடி ரூபாய் அபராதம் விதித்தது.
இந்த நடவடிக்கைக்கு முக்கியக்காரணமாக இருந்தவர், டெல்லியைச்சேர்ந்த இளம்பெண் சுகர்மா. இவர் நல்சார் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்தவர். இந்தியப்போட்டி ஒழுங்குமுறை ஆணையத்தில் சுயாதீன ஆலோசகராக பணியாற்றிய சுகர்மா, கூகுள் பின்பற்றும் சில முறைகளால் பல நிறுவனங்களின் வளர்ச்சிப் பாதிக்கப்படுவதை நிரூபிக்க முயற்சித்தார். தனது நீண்ட ஆராய்ச்சியின் பலனாக இதற்கான ஆதாரங்களைத் திரட்டி, போட்டி ஒழுங்குமுறை ஆணையத்திடம் வழங்கினார். அதன் பேரிலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.