சிதி: மத்திய பிரதேச மாநிலம் சட்னா நகரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்ட மாநாடு நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். மாநாடு நிறைவு பெற்றதும் இரு பேருந்துகள் மூலம் மக்கள் தங்கள் ஊர்களுக்கு செல்ல இருந்தனர்.
சிதி நகர் அருகே சாலையோரத்தில் மக்கள் கூட்டத்துடன் இரு பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் எதிர்திசையில் தாறுமாறாக வந்த லாரி திடீரென இரண்டு பேருந்துகள் மீது மோதி கோர விபத்தை ஏற்படுத்தியது. அருகில் இருந்த பள்ளத்தில் பேருந்துகள் கவிழ்ந்து விழுந்தது.
பேருந்தில் இருந்த பயணிகள் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மீட்பு படையினர் தொடர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். பேருந்து விபத்தில் சிக்கிய 14 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். மேலும் 56 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
கனரக லாரியின் முன்பக்க டயர் வெடித்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டது முதற் கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் கூறினர். மேலும் உணவு பொட்டலங்கள் வாங்க பேருந்துகள் நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் கனரக லாரி மோதி விபத்து ஏற்பட்டதாக போலீசார் கூறினர்.
பேருந்து விபத்தில் உயிரிழந்த 14 பேருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரங்கல் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களை பார்த்து ஆறுதல் கூறினார். மேலும் விபத்து நடைபெற்ற இடத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து பேசிய அவர், "விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 10 லட்ச ரூபாய் நிவாரண உதவியும், உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என்றார். மேலும் அதிகபட்ச காயம் அடைந்தவர்களுக்கு 2 லட்ச ரூபாயும், லேசான காயங்களுடன் உயிர் தப்பியவர்களுக்கு 1 லட்ச ரூபாயும் வழங்கப்படும் என்றார்.
இதையும் படிங்க:வாடகை வருவாயில் வரிச் சுமையை குறைக்க சூப்பர் டிப்ஸ்!