டெல்லி:சீனாவில் எச்9என்2 என்னும் இன்புளூயன்சா பரவி வருகிறது. சீனாவில் பரவி வரும் சுவாச கோளாறு குறித்து உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், இதானால் இந்தியாவிற்கு பெரியளவில் ஆபத்து இருக்காது எனவும், கரோனாவிற்கு பிறகு எத்தகைய சுகாதார பேராபத்துக்கள் வந்தாலும் அதை எதிர்கொள்ளும் அளவிற்கு உட்கட்டமைப்பு வலிப்படுத்தப்பட்டுள்ளதாக சமீபத்தில் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், சீனாவில் பரவி வரும் சுவாச கோளாறுகளால் பாதிக்கப்படுவபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், ராஜஸ்தான், குஜராத், உத்தரகாண்ட், கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் தங்களின் மருத்துவ உட்கட்டமைப்பை தயார்நிலையில் வைக்க வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகம் சுவாச நோய்களுக்கு எதிராக மிகுந்த எச்சரிக்கையுடன் ஆயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், இந்த பாதிப்பு குளிர்காலம் காரணமாக அதிகம் பரவுவதாகவும், அதனை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், இதற்கு பதற்றமடையத் தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளது.
மேலும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தங்கள் மருத்துவ கட்டமைப்பை தயார்நிலையில் வைக்கும் படி மத்திய சுகாதாரத்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், கரோனா காலத்தில் திருத்தப்பட்ட செயல்பாட்டு வழிகாட்டுதல்களை செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சீனாவில் பரவும் நோய் கடுமையான சுவாச நோய் (severe acute respiratory illness-SARI) என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.