அமராவதி: ஆந்திரப் பிரதேசம் மாநிலம் பார்வதிபுரம் மன்யம் மாவட்டத்தில் ஒன்பது வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த 48 வயதுடைய நபரை பொதுமக்களே துரத்திச்சென்று பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி ஜனவரி 1ஆம் தேதி இரவு கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார்.
அப்போது அடையாளம் தெரியாத 48 வயது மதிக்கத் தக்க நபர் சிறுமியை வலுக்கட்டாயமாக இழுந்து சென்று ஆள்நடமாட்டமில்லாத பகுதியில் வைத்து பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். அந்த வழியாக சென்ற கிராம மக்களுக்கு சிறுமியின் அலறல் கேட்டுள்ளது.
இதைக் கேட்ட கிராம மக்கள் நெருங்கி சென்றபோது, அந்த நபர் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார். இருப்பினும், அவரை மக்கள் விடாமல் துரத்தி சென்றனர். அப்படி பக்கத்து கிராமத்தில் பதுங்கியிருந்த அவரை நள்ளிரவிலேயே பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனிடையே சிறுமி மீட்கப்பட்டார். அவருக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டிருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ஒருதலைக் காதல்: இளம்பெண்ணை குத்திக்கொன்று இளைஞர் தற்கொலை முயற்சி