தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கேரளாவில் தமிழக தொழிலாளி கொலை - தூங்கிக் கொண்டிருந்தபோது அடித்துக் கொல்லப்பட்ட கொடூரம்! - கேரளாவில் கொடூரம்

கேரளாவில் கோவில் கட்டும் பணிக்குச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளி, தூங்கிக் கொண்டிருந்தபோது சக தொழிலாளியால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் கோட்டயத்தை சேர்ந்த பிஜு என்பவரை போலீசார் கைது செய்தனர்.

man
கேரளா

By

Published : May 12, 2023, 6:46 PM IST

கேரளா: கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் உள்ள நீண்டகரை பகுதியில் ஸ்ரீபாலபத்ரதேவி திருக்கோவில் கட்டப்பட்டு வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த கோயில் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கேரளா மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் இப்பகுதியில் தங்கி கோயில் கட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்றிரவு(மே.11) வழக்கம்போல் வேலையை முடித்துவிட்டு தொழிலாளர்கள் அனைவரும் கோயில் வளாகத்திலேயே உறங்கச் சென்றனர். ஆனால், நேற்றிரவு சற்று அதிகமாக அவர்கள் மது குடித்ததாக தெரிகிறது. அப்போது, கோட்டயத்தைச் சேர்ந்த பிஜு என்பவரிடம், தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளியான மகாலிங்கம் படம் பார்ப்பதற்காக செல்போனை கேட்டுள்ளார். ஆனால், பிஜு தர மறுத்ததாகத் தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரும் போதையில் இருந்ததால், வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது. அப்போது உடனிருந்த தொழிலாளர்கள் பேசி சமாதானப்படுத்தினர். சிறிது நேரத்திற்குப் பிறகு மகாலிங்கம் பிஜுவின் போனை எடுத்ததாகத் தெரிகிறது.

இதையடுத்து அனைவரும் உறங்கச் சென்றுவிட்டனர். தனது போனை மகாலிங்கம் எடுத்ததை அறிந்த பிஜு, நள்ளிரவில் உறங்கிக் கொண்டிருந்த மகாலிங்கத்தை அருகில் கிடந்த கம்பியை எடுத்து தாக்கியுள்ளார். அப்போது மகாலிங்கம் கதறிய சத்தம் கேட்டு உறங்கிக் கொண்டிருந்த சக ஊழியர்கள் எழுந்தனர். ஆனால், தலையில் கடுமையாக தாக்கப்பட்டதால், மகாலிங்கம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துவிட்டார்.

பின்னர், இது தொடர்பாக கோவில் நிர்வாகம் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை மீட்டு கொல்லம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிறகு பிஜுவை கைது செய்தனர். இன்று காலையில் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று தடயங்களை கைப்பற்றினர். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்ட தொழிலாளி மகாலிங்கம், தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என போலீசார் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: குருவியாக வந்த எம்பிஏ பட்டதாரி.. கூண்டோடு சிக்கியது எப்படி?

ABOUT THE AUTHOR

...view details