தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சிறைவாசியான சேவல் - தெலங்கானா மாநிலத்தில் தான் இந்தச் சம்பவம்! - jadcherla

சேவல் திருடியதாக உள்ளூர் மக்கள் சிறுவனை காவல் நிலையத்தில் ஒப்படைத்த நிலையில், சேவலின் பாதுகாப்பு கருதி அதனை லாக்கப்பில் அடைத்த சம்பவம் தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

A male chicken is locked up in a prison.. By the way What did it do
சிறைவாசியான சேவல் - தெலங்கானா மாநிலத்தில் தான் இந்த சம்பவம்!

By

Published : Jul 11, 2023, 2:43 PM IST

ஜட்சேர்லா:கொடிபுஞ்சு (சேவல்) சிறை லாக்கப்பில் வைக்கப்பட்டு இருந்த சுவாரஸ்யமான சம்பவம், தெலங்கானா மாநிலம், மகபூபநகர் மாவட்டத்தில் உள்ள ஜாட்சர்லா காவல் நிலையத்தில் திங்கள்கிழமை (ஜூலை 10ஆம் தேதி) அரங்கேறி உள்ளது.

ஜட்சேர்லா நகராட்சிக்கு உட்பட்ட பூரெட்டிப்பள்ளி கிராமத்திற்கு அருகே சிறுவன் ஒருவன், கொடிபுஞ்சு (சேவல்) தன் கையில் கொண்டு செல்வதைப் பார்த்த அப்பகுதி மக்கள், அவன் சேவல் திருடியதாகப் போலீசில் புகார் அளித்தனர். புகாரைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், அந்தச் சிறுவன் உடன் சேவலையும் காவல் நிலையத்திற்குக் கொண்டு வந்தனர்.

குற்றம்சாட்டப்பட்ட சிறுவன், 18 வயது கூட நிரம்பாத மைனர் என்பதால், அவரது பெற்றோர் வரவழைக்கப்பட்டு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டான். சேவல் யாருடையது என்பது தெரியவில்லை. சேவல் மாயம் ஆனது தொடர்பாக, யாரிடமும் இருந்தும் எந்த புகாரும் வரவில்லை.

இந்த சேவலை அப்படியே, வெளியில் விட்டால், நாய்கள் தாக்க வாய்ப்பு உள்ளது என்று நினைத்த காவல்துறை அதிகாரி ரமேஷ்பாபு, சேவலை, லாக்கப்பிலேயே அடைத்து வைத்து, அதற்குத் தேவையான உணவுப் பொருட்கள் மற்றும் தண்ணீர் வைக்க ஏற்பாடு செய்தார். காவல் நிலையம் சென்ற அனைவரும் லாக்கப் அறையில் இருந்த சேவலை, ஆர்வத்துடன் பார்த்துச் சென்றனர். இதுகுறித்து, அந்த காவல்துறை அதிகாரியிடம் விளக்கம் கேட்டபோது, பாதுகாப்பு கருதி,சிறையின் லாக்கப்பில் சேவல் அடைக்கப்பட்டு இருப்பதாகக் கூறினார்.

இதேபோல், மயில் மீது பெண் ஒருவர் புகார் கொடுத்த விசித்திரமான சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடந்தேறியுள்ளது. கர்நாடக மாநிலத்தின் ராமநகரா மாவட்டத்தில் உள்ள சன்னாபாட்னா தாலுகாவிற்கு உட்பட்ட அரலாலுசந்திரா கிராமத்தில் லிங்கம்மா என்ற பெண் வசித்து வருகிறார். இவர் கடந்த ஜூன் 28ஆம் தேதி அருகில் உள்ள வனப் பாதுகாவலர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்து உள்ளார்.

அந்தப் புகார் கடிதத்தில், 'கடந்த நான்கைந்து நாட்களாக எனது வீட்டின் அருகில் மயில் ஒன்று வாழ்ந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த ஜூன் 26அன்று நான் எனது வீட்டின் பின்புறத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். அப்போது எனது அருகே அந்த மயில் வந்தது. பின்னர், அது அதனுடைய அலகால் என்னைத் தாக்கியது.

இதனால் எனது உடலில் பயங்கரமான படுகாயம் ஏற்பட்டது. அப்போது மாலை நேரம் என்பதால், நான் எனது கிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தேன். பின்னர், மறுநாள் பிவி ஹள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சென்று சிகிச்சை பெற்றுக்கொண்டேன். எனவே, என்னை தாக்கி காயம் ஏற்படுத்திய மயில் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்படி, அந்த மயிலை பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும்'' எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மேலும், இந்தப் புகார் கடிதத்தில் கிராம மக்கள் சிலரும் கையெழுத்திட்டிருந்தனர். அது மட்டுமல்லாமல், ஏராளமான மயில்கள் தங்களை தாக்குவதாக கிராம மக்கள் புகார் அளித்து உள்ளனர். மேலும், விவசாய நிலங்களில் உள்ள விதைகளை உண்டு சேதம் ஏற்படுத்துவதாக, விவசாயிகளும் புகார் அளித்து உள்ளனர்.

அதேநேரம், அரலாலுசந்திரா பகுதியில் பல்வேறு வன விலங்குகளால் இடர்பாடு எனப் புகார்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், மயில் மீது புகார் வந்திருப்பது இதுவே முதல்முறை என வனத்துறை அலுவலர்கள் கூறி உள்ளனர். முன்னதாக, தக்‌ஷின கன்னடாவில் உள்ள கபடாவில் இருக்கும் பிரதான சாலையில் குதிரை ஒன்று சுற்றித் திரிவதாகவும், இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதாகவும் காவல் நிலையத்தில் புகார்கள் வந்து உள்ளன.

பின்னர், காவல் நிலையத்துக்கு வந்த குதிரையின் உரிமையாளர், இனி தனது குதிரையால் எந்தவொரு தவறும் நிகழாது எனக் கூறி குதிரையை அழைத்துச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வு அலெக்காடியில் நடைபெற்று உள்ளது.

இதையும் படிங்க: Article 370: உச்ச நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 2 முதல் நாள்தோறும் விசாரணை

ABOUT THE AUTHOR

...view details