பெங்களூரு:கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் 2023க்கான வாக்குப்பதிவு கடந்த 10ஆம் தேதி ஒரே கட்டமாக பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது. இதனையடுத்து, நேற்று (மே 13) காலை 8 மணி முதல் எண்ணப்பட்ட வாக்கு எண்ணிக்கையின் முடிவில், 135 இடங்களைக் கைப்பற்றிய காங்கிரஸ் தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்க உள்ளது.
இதனையடுத்து எதிர்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ள பாஜக 66 இடங்களையும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 19, கல்யாண ராஜ்ய பிரகதி பாக்சா மற்றும் சர்வோதயா கர்நாடகா பாக்ஷா ஆகிய இரண்டு கட்சிகளும் தலா 1 மற்றும் சுயேட்சைகள் 2 இடங்களையும் கைப்பற்றி உள்ளனர். இந்த நிலையில், கர்நாடகா காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குண்டுராவ் உள்பட சில முக்கிய வேட்பாளர்களும் மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றுள்ளனர்.
அந்த வகையில், ஹதகள்ளி(Hadagali) பாஜக வேட்பாளர் கிருஷ்ணா நாயகா, காங்கிரஸ் கட்சியின் பரமேஸ்வரா நாயகாவை ஆயிரத்து 444 வாக்குகளிலும், பிடர் தெற்கு பாஜக வேட்பாளர் சைலேந்திர பெல்டாலே, காங்கிரஸ் வேட்பாளர் அசோக் கெனியை விட ஆயிரத்து 263 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.
ஜகலூர்(Jagalur) தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் தேவேந்திரப்பா 874 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் ராமச்சந்திராவை தோற்கடித்துள்ளார். சின்சோலி பாஜக வேட்பாளர் அவினாஷ் உமேஷ் ஜாதவ், காங்கிரஸ் வேட்பாளர் சுபாஷ் வி ராதட்டை விட 858 வாக்குகள் வித்தியாசத்திலும், முடிகேரி(Madikeri) காங்கிரஸ் வேட்பாளர் நயனா மொட்டம்மா, பாஜகவின் தீபக் தோதய்யாவை 722 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.