புதுச்சேரி:பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியைச் சேர்ந்த மாணவி தான் நிவேதா. இவர் தேசிய மாணவர் படை ஏர் ஃபோர்ஸ்(Air Force) பிரிவில் உள்ளார். இன்று உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர்களை கௌரவிக்கும் வகையில் மாணவி நிவேதா, ஒருநாள் காவல்துறை அலுவலராகப் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளார். புதுச்சேரி முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் நிலைய அலுவலராகப் பணிக்கு அமர்த்தப்பட்ட மாணவி நிவேதா, காலையில் வழக்கம்போல் காவல் நிலையம் சென்று காவல் நிலையப் பணிகளை சரி பார்த்தார்.
பல்வேறு காவல் பணிகளில் ஈடுபட்ட ஒரு நாள் போலீஸ் மாணவி
பின்பு காலை நேரம் என்பதால் போக்குவரத்தை சரி செய்த மாணவி, புதுச்சேரி மாநில எல்லையான கோட்டகுப்பம் வரை ரோந்துசென்று சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்தையும் சரிசெய்த பின்னர், பாரதிதாசன் மகளிர் கல்லூரிக்குச் சென்று அங்கு காவலர்கள் பணியில் உள்ளார்களா என்று ஆய்வு செய்தார்.
இதனைத்தொடர்ந்து பொதுமக்களின் குறைகளைக் கேட்டு அவற்றுக்கு நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறார். உலக மகளிர் தினத்தை முன்னிட்டு புதுச்சேரி போலீஸின் இந்த புதிய முயற்சி அனைத்து தரப்பு மக்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.