ஈக்ரா :மேற்கு வங்கத்தில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேரின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மேற்கு வங்கம் மாநிலம் கிழக்கு மிட்னாபூர் மாவட்டம் ஈக்ராவில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அருகில் உள்ள கிராமங்களை வரை இந்த வெடி சத்தம் கேட்டதாக கூறப்படுகிறது. இந்த கோர வெடி விபத்தில் பட்டாசு தொழிற்சாலையின் கட்டடங்கள் இடந்து தரைமட்டமாகின.
இந்த கோர விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை குறித்த முழுவிபரம் தெரிவிக்கப்படாத நிலையில், 3 பேர் உயிரிழந்திருக்கக் கூடும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 7 பேர் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என கூறப்படுகிறது.
அதேநேரம் பட்டாசு ஆலையில் வெடிகுண்டு தயாரித்த போது இந்த விபத்து ஏற்பட்டதாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுவெந்து அதிகாரி தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக சுவெந்து அதிகாரி தன் ட்விட்டர் பக்கத்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஒருவரின் தொழிற்சாலையில் சட்டவிரோதமாக வெடிகுண்டு தயாரிக்கப்பட்டதாகவும் அதில் ஏற்பட்ட விபத்தில் அப்பாவி மக்கள் உயிரிழந்ததாகவும் தெரிவித்து உள்ளார்.
விரைவில் பஞ்சாயத்து தலைவர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த கோர விபத்து சட்ட ஒழுங்கு பிரச்சினையை தீவிரப்படுத்தி உள்ளதாக தெரிவித்து உள்ளார். பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நினைத்து பார்பதை விட அதிகரித்து இருக்கலாம் என்றும் உயிரிழந்தவர்களின் சடலங்களை மம்தாவின் போலீசார் சட்டவிரோதமாக கடத்திச் செல்வதற்குள் சம்பவ இடத்தில் மத்திய படையினரை நிறுத்த வேண்டும் என்றும் சுவெந்து அதிகாரி தெரிவித்து உள்ளார்.