கர்நாடகா: எச்3 என்2 எனப்படும் இந்புளுயன்சா காய்ச்சல் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பரவி வருவதாக கூறப்படுகிறது. கரோனா போன்று இந்த வகை வைரஸ் காய்ச்சலுக்கும் சளி, தும்மல், இருமல், சுவாச பிரச்சினைகள் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும் என ஐசிஎம்ஆர் தெரிவித்து உள்ளது.
இந்நிலையில், நாட்டில் முதல் முறையாக எச்3என்2 இன்புளுயன்சா வைரஸ் தாக்கி ஒருவர் உயிரிழந்ததாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகி உள்ளது. கர்நாடகா மாநிலம் ஹசன் பகுதியைச் சேர்ந்த 85 வயுதான ஹயர் கவுடா, கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி உடல் நலக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், கடந்த மார்ச் 1ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் உயிரிழந்த பின் எடுக்கப்பட்ட மாதிரிகளை ஆய்வு அனுப்பியதில் அவருக்கு எச்3என்2 இன்புளுயன்சா வைரஸ் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த ஹயர் கவுடாவுக்கு சர்க்கைரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட இணை நோய்கள் இருந்ததாக கர்நாடக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். ஹயர் கவுடா மரணத்தை தொடர்ந்து மாநிலத்தில் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களை தனிக் கவனம் செலுத்தி கண்காணிக்க திட்டமிட்டு உள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
பரபரப்பான இந்த சூழலில் கர்நாடாக சுகாதாரத் துறை அமைச்சர் சுதாகர் சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தை கூட்டினார். கூட்டத்தில் சிறப்பு மருத்து நிபுணர்கள், சுகாதாரத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாநிலத்தில் எச்3என்2 வைரஸ் தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த வகை எச்3என்2 இன்புளுயன்சா வைரல் பாதிப்புக்குள்ளாகி நாடு முழுவதும் 90 பேர் வரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத் துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் எச்1என்1 வைரஸ் தாக்கியும் 8 க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
எச்3என்2 இன்புளுயன்சா வைரஸ் பாதித்தவர்களுக்கு, கரோனா வைரஸ் போன்றே சளி, இருமல், தொடர் தும்மல், சுவாசக் கோளாறு, மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்ட பாதிப்புகளே நிலவுவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலான ஐசிஎம்ஆர் தெரிவித்து உள்ளது. மேலும் பொது வெளிகளில் நடமாடும் மக்கள் கட்டாயம் முக கவசம் அணிவது, கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஐசிஎம்ஆர் அறிவுறுத்தி உள்ளது.
கர்நாடகாவைத் தொடர்ந்து ஹரியானாவில் ஒருவரும் இன்புளுயன்சா வைரஸ் காய்ச்சலுக்கு பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. உயிரிழந்தவர் ஹரியானா மாநிலம் ஜிந்த் மாவட்டத்தை சேர்ந்த 56 வயது முதியவர் என்றும் ரோட்டக்கில் உள்ள அரசு மருத்துவமனையில் அவருக்கு பரிசோதனை செய்யப்பட்ட போது வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க:3-வது முறையாக சீனா அதிபர் ஜி ஜின்பிங் பதவியேற்பு - புது வரலாறு படைத்தார்!