வாராங்கல்: தெலங்கானா மாநிலம் வாராங்கல் மாவட்டத்தில் உள்ள லிங்யா தண்டா கிராமத்தைச் சேர்ந்த 8 வயது சிறுவனுக்கு கடந்த 4ஆம் தேதி நடந்த விபத்து ஒன்றில், வலது கை உடைந்துள்ளது. சிறுவன் சிகிச்சைக்காக வாராங்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். சிறுவனுக்கு கையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து நேற்று(செப்.6) சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்துச் சென்றுள்ளனர். சிகிச்சைக்கு முன்னதாக மயக்க மருந்து கொடுக்கப்பட்டது. அடுத்த சில வினாடிகளில் சிறுவனுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. செயற்கை சுவாசம் கொடுத்து காப்பாற்ற மருத்துவர்கள் முயன்றபோதும், சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டான். சிறுவன் காலை 10.30 மணியளவில் உயிரிழந்த நிலையில், பிற்பகல் 1.10 மணிக்கு பெற்றோரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.