எர்ணாகுளம் (கேரளா):கடந்த 2010ஆம் ஆண்டு மார்ச் 23 அன்று, கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள தொடுபுழா நியூமேன் கல்லூரியில் பணியாற்றி வந்த பேராசிரியர் டிஜே ஜோசப் என்பவரின் கையை மர்ம நபர்கள் வெட்டிச் சென்றனர். இந்த சம்பவம் நடந்ததற்கான காரணம், அன்றைய தினம் கல்லூரியில் நடைபெற்றுக் கொண்டிருந்த பி.காம் மலையாளம் இடைநிலைத் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் இறை தூதர் குறித்து தவறுதலாகக் கேட்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், பேராசிரியர் ஜோசப்பின் கையை மர்ம நபர்கள் வெட்டிச் சென்ற சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதன் பின்னர், இது குறித்து கேரள காவல் துறை விசாரணை நடத்தியது. அதன் பின்னர், தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தனது விசாரணையைத் தொடங்கியது.
இந்த விசாரணையில், தற்போது நாட்டில் தடை செய்யப்பட்டு உள்ள பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா (PFI) என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் திட்டமிட்டு இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிய வந்தது. இதனையடுத்து இதன் முதற்கட்ட விசாரணையின்போது 37 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.
இதில் 11 பேரிடம் தற்போது விசாரணை நடைபெற்று வந்த நிலையில், மீதம் உள்ள 26 பேர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கின் இரண்டாம் கட்ட விசாரணை தொடங்கப்பட்டு, இதில் விசாரிக்கப்பட்ட அனைவரின் தரவுகளும் தனித்தனி குற்றப்பத்திரிகையாக தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
இந்த விவகாரம் உபா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாம் கட்ட விசாரணையின் அடிப்படையில், பிஎப்ஐ அமைப்பைச் சேர்ந்த 11 பேரில் 6 பேர் குற்றவாளிகள் என தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றம் தீர்ப்பு அளித்து உள்ளது.
அதேநேரம், விசாரணையில் இருந்த மீதம் உள்ள 5 பேரை வழக்கில் இருந்து விடுவித்து என்ஐஏ நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. மேலும், குற்றவாளிகள் என தீர்ப்பு அளிக்கப்பட்ட 6 பேருக்கும் வழங்கப்பட உள்ள தண்டனை விபரம் இன்று வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க:Chhattisgarh: மீண்டும் பழங்குடியின இளைஞர் மீது தாக்குதல்... இப்ப என்ன காரணம் தெரியுமா?