யாதகிரி : கர்நாடகாவில் சாலையோரம் நின்று கொண்டு இருந்த சரக்கு லாரி மீது கார் மோதிய விபத்தில், ஆன்மீக சுற்றுலா மேற்கொண்ட குழந்தை உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆந்திர மாநிலம் நந்தயாலா மாவட்டம் வெலகுடு கிராமத்தை சேர்ந்த 18 பேர், கர்நாடக மாநிலம் கலபுருகியில் நடைபெற இருந்த தர்ஹா உர்ஸ் திருவிழாவில் கலந்து கொள்ள காரில் பயணித்து உள்ளனர். அதிகாலை வேளையில் ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்த கார் சாலையோரம் நின்று கொண்டு இருந்த சரக்கு லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், குழந்தை உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த 15 பேரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்துக்கான காரணம் தெரியவராத நிலையில், சைதாபூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.