திருவனந்தபுரம்: தமிழ்நாட்டைப் போன்று அண்டை மாநிலமான கேரளத்திலும் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
கேரளத்தில் வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் அமைச்சர்கள் தாமஸ் ஐசக், ஜி. சுதாகரன், சி. ரவீந்திரநாத், ஈபி ஜெயராஜன் மற்றும் ஏகே பாலன் ஆகியோர் போட்டியிட வேண்டாம் என சிபிஎம் மாநில தலைமை முடிவெடுத்துள்ளது.
எனினும் முதலமைச்சர் பினராயி விஜயன் உள்பட இதர அமைச்சர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர். 14 மாவட்டங்கள் கொண்ட 140 சட்டப்பேரவைக்கு தொகுதிக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில், 14 தொகுதி பட்டியலினம் மற்றும் பழங்குடியினருக்கான தனித்தொகுதி ஆகும்.
மொத்த வாக்காளர்கள் 2 கோடியே 67 லட்சத்து 88 ஆயிரத்து 268 உள்ளனர். அதேபோல், வாக்குப்பதிவு மையங்கள் 21 ஆயிரத்து 498இல் இருந்து 40 ஆயிரத்து 771 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி நடக்கிறது.
மாநிலத்தில் 15ஆவது சட்டப்பேரவையை கைப்பற்றப்போவது யார் என்பது குறித்து ஆளுங்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கும் இடையே கடும் போட்டிநிலவி வருகிறது. பாஜகவும் தன் பங்குக்கு கூட்டணி வைத்து மூன்றாவது அணியாக உருவெடுத்துள்ளது.
கடந்த 2016ஆம் தேர்தலில் இடதுசாரி கூட்டணி 91 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றியது. பாஜக சார்பில் அக்கட்சியின் மூத்தத் தலைவர் ஓ. ராஜகோபால் வெற்றிபெற்று எம்எல்ஏ ஆனார் என்பது நினைவுக் கூரத்தக்கது.