கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக, வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல விவசாய சங்கங்கள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டுவருகிறது. அதில், முக்கிய விவசாய சங்கமாக பாரதிய கிசான் யூனியன் உள்ளது.
இந்நிலையில், விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு திரட்டும் வகையில் 40 விவசாய சங்க தலைவர்கள் நாடு தழுவிய சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அதன் தலைவர் ராகேஷ் டிக்கைட் தெரிவித்துள்ளார். ஹரியானா மாநிலம் இந்த்ரியில் நேற்று நடைபெற்ற மகா பஞ்சாயத்தில் கலந்துகொண்ட அவர், "விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றும்வரை மத்திய அரசை அமைதியாக அமர்ந்திருக்க விட மாட்டோம்.
இம்முறை, 40 லட்சம் டிராக்டர்களை பேரணியில் பங்கேற்க வைப்பதை இலக்காக கொண்டுள்ளோம். விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு திரட்ட நான் உள்பட 40 விவசாய தலைவர்கள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளோம். இந்த இயக்கத்திற்காக அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம்.
நாட்டின் எதிர்காலம் குறித்த முடிவை விவசாயிகளே எடுப்பார்கள். பேச்சுவார்த்தை நடத்தி எங்களின் கோரிக்கைகள் நிறைவேறும்வரை மத்திய அரசை அமைதியாக அமர்ந்திருக்க விட மாட்டோம். குறைந்தபட்ச ஆதார விலை தொடர்பான சட்டம் நிறைவேற்றப்பட்டால் நாடே பயன்பெறும். மூன்று விவசாய சட்டங்களையும் மத்திய அரசு நீக்க வேண்டும். விவசாய சங்கங்கள் எந்த முடிவு எடுத்தாலும் அதனை அனைவரும் ஏற்று கொள்வோம்" என்றார்.