டெல்லி:2024 நாடாளுமன்றத் தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜக அரசை தோற்கடிக்க எதிர்கட்சித் தலைவர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். பாஜகவிற்கு எதிராக வலுவான எதிரணியை உருவாக்க பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் வேலைகள் நடந்து வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, கடந்த ஜூன் 23ஆம் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் தேசிய அளவிலான எதிர்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 17 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம், கர்நாடக மாநிலம் பெங்களுருவில் நேற்று (ஜூலை 17) தொடங்கியது.
இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். இரண்டாவது நாளாக இன்றும் (ஜூலை 18) எதிர்கட்சிகள் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்த பாஜக தலைவர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் இன்று மாலை நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
இதில் கலந்து கொள்ள பாஜகவின் கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் 38 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.