புதுச்சேரி:புதுச்சேரியில் தொழிலதிபரை மிரட்டும் நோக்கில் நாட்டு வெடிகுண்டு வீச கூட்டாளியுடன் வந்த பிரபல ரவுடியின் காலிலேயே வெடிகுண்டு தவறி விழுந்து வெடித்த சம்பவத்தில், இரண்டு பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், குண்டு வீசிய ரவுடி மற்றும் அவரது கூட்டாளியை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி காலாப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி சுகன். இவர் கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் பிரபல தொழிலதிபர்களை மிரட்டி மாமுல் வாங்குவதும், பணம் பறிப்பதுமே வாடிக்கை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், ராமநாதபுரத்தில் பிளாஸ்டிக் பாட்டில் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வரும் தொண்டமானத்தம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ரவுடி சுகன் மாமூல் கேட்டதாக தெரிகிறது. ஆனால், அவர் தரமுடியாது என மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சுகன், நேற்று (ஜன.5) தனது கூட்டாளியுடன் ராமநாதபுரம் தொழிற்சாலைக்கு சென்றுள்ளார். அப்போது, தொழிற்சாலை வெளியே நின்றிருந்த உரிமையாளர் வெங்கடேசனிடம் மாமுல் கேட்டு மிரட்டி வெடிகுண்டு வீச முற்பட்டுள்ளனர். அப்பொழுது வெடிகுண்டு எதிர்பாராத விதமாக, தவறி கீழே விழுந்து வெடித்ததில் பிரபல ரவுடி சுகன் மற்றும் தொழில் அதிபர் வெங்கடேசன் மற்றும் ஊழியர் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து, ரவுடி சுகன், காலில் வெடிகுண்டு வெடித்து பலத்த காயம் ஏற்பட்ட நிலையிலும் தனது கூட்டாளியுடன் இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதுகுறித்து அந்த பகுதியில் இருந்தவர்கள் வில்லியனூர் போலீசாருக்குத் தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வில்லியனூர் காவல் கண்காணிப்பாளர் வம்சிதரெட்டி, ஆய்வாளர் ஆறுமுகம், உதவி ஆய்வாளர் வேலு ஆகியோர், ரத்த வெள்ளத்தில் துடித்துடித்த தொழிற்சாலை உரிமையாளர் மற்றும் அவரது ஊழியரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து, மோப்பநாய், கைரேகை நிபுணர்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் வந்து சம்பவ இடத்தில் சோதனை செய்தனர். தப்பி ஓடிய ரவுடி மற்றும் அவரது கூட்டாளியை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டை நடத்திய நிலையில், சிகிச்சைக்காக காலாப்பட்டு மருத்துவமனைக்குச் சென்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, அங்கு சென்ற போலீசார், ரவுடி சுகனை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். மேலும், நாட்டு வெடிகுண்டு வீச்சு சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுச்சேரியில் தொழிற்சாலை உரிமையாளரை மிரட்டும் நோக்கில் எடுத்துவரப்பட்ட நாட்டு வெடிகுண்டு ரவுடி காலிலேயே வெடித்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரவுடி சுகன் மீது கொலை, கொள்ளை ஆள் கடத்தல் உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:போக்குவரத்து தொழிற்சங்கங்கள் உடனான பேச்சுவார்த்தை நாளை மறுநாள் தொடரும் - அமைச்சர் சிவசங்கர்!