கொல்லம்: கடந்த நவம்பர் 27ஆம் தேதி கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஒய்யூர் பகுதியில் 6 வயது பெண் குழந்தை கடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குழந்தை நவம்பர் 27ஆம் தேதி மாலை டியூஷன் வகுப்புகள் முடிந்து வீட்டிற்கு திரும்பிய போது நான்கு பேர் கொண்ட கும்பலால் கடத்தப்பட்டுள்ளார்.
இதனையடுத்து இந்த வழக்கில் கடத்தல்காரர்கள் குழந்தையை பாதுகாப்பாக ஒப்படைக்க வேண்டுமென்றால் 5 லட்சம் வேண்டும் என அவரது தாயை தொலைபேசியில் மிரட்டியதாக போலீசார் தெரிவிக்கின்றனர். இதையடுத்து குழந்தைகளை கடத்தியவர்கள் தங்களை போலீஸ் தீவிரமாக தேடி வருவது அறிந்து அச்சத்தால் அடுத்த நாளே கொல்லம் பகுதியில் உள்ள ஒரு மைதானத்தில் குழந்தையை விட்டுச் சென்றனர்.
இதனை தொடர்ந்து அந்த 6 வயது பெண் குழந்தை கடத்தியவர்கள் அடையாளங்களை கூறியதை வரைந்து வைத்து, போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கினர். மேலும் இந்த வழக்கில் தனிப்பிரிவு அமைத்து குற்றவாளியை தேடி வந்த கேரள போலீஸார், தென்காசி மாவட்டத்தை சேர்ந்த கே.ஆர் பத்மகுமார் (வயது 52), மற்றும் அவரது மனைவி மற்றும் மகளை கைது செய்தனர்.