டெல்லி: நாடு முழுவதும் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா (கிராமப்புறம்) திட்டத்தின் கீழ் 2 கோடியே 52 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இதற்காக, சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
இதேபோல், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா (நகர்ப்புறம்) திட்டத்தின் கீழ், 1 லட்சத்து 18 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீட்டில், 58 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு வீட்டிலும் எரிவாயு இணைப்பு, தண்ணீர், மின் இணைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் மூலம், நாட்டில் உள்ள ஏழை குடும்பங்களுக்கு வீடு வழங்க வேண்டும் என்ற முக்கியமான நோக்கத்தை மத்திய அரசு மேற்கொண்டுவருகிறது.
இத்திட்டத்தின் கீழ் 3 கோடிக்கும் அதிகமான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இது நாட்டு மக்களின் பங்களிப்பால் மட்டுமே சாத்தியமானது. அடிப்படை வசதிகளுடன் கூடிய இந்த வீடுகள், பெண்களின் முன்னேற்றத்திற்கு ஒரு அடையாளமாக திகழ்கிறது" எனப் பதிவிட்டுள்ளார்.