டெல்லி: நாடாளுமன்றத்தின் புதிய கட்டடம் பலர் முன்னிலையில் நாளை (மே 28) பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார். இந்நிலையில், டெல்லி சென்ற 21 ஆதீன சுவாமிகள் அமைச்சர்கள் மற்றும் மற்ற ஆதீன சுவாமிகள் முன்னிலையில் புனித செங்கோலை மதுரையின் 293 ஆவது தலைமை ஆதீன சுவாமிகள் பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்கினார். நாடாளுமன்றத்தின் புதிய கட்டடம் நாளை திறக்கப்படவுள்ள நிலையில், ஆதீன செங்கோல் குறித்து பல கருத்துகள் எழுந்த வண்ணம் உள்ளன. இது குறித்து ஆதீன சுவாமிகள் விரிவாக விளக்கமளித்துள்ளனர்.
மேலும், புதிதாக திறக்கப்படவுள்ள நாடாளுமன்ற கட்டடத்தில் ஆதீனத்தின் செங்கோலை சபாநாயகர் பின் இருக்கையில் வைக்க இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்குபெற ஆதீன சுவாமிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த அழைப்பினை ஏற்றுக் கொண்ட ஆதீன சுவாமிகள் டெல்லி செல்ல இருப்பதாக அறிவித்தனர். முன்னதாக, செங்கோல் குறித்து பலர் பொய்யான தகவலை பரப்பி வருவது வேதனை அளிக்கிறது என்று திருவாடுதுறை ஆதீனம் அம்பலவான தேசிக பராமாச்சாரிய சுவாமிகள் வருத்தம் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், "இந்த செங்கோல், திருவாடுதுறை ஆதீனத்தின் மூலமாக 1947 ஆம் ஆண்டு பிரிட்டிஷாரின் ஆட்சி முடிவை குறிக்கும் வகையிலும் இந்தியா சுதந்திரம் அடைந்ததை சுட்டிக்காட்டும் வகையிலும் ஜவஹர்லால் நேருவிடம் கொடுக்கப்பட்டது. 75ஆண்டுகளாக அலாகபாத் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த இந்த செங்கோல் தற்போது மீண்டும் உயிர்ப் பெற்றுள்ளது. இது தமிழநாட்டிற்கு மட்டுமின்றி தமிழர்கள் அனைவருக்கும் கூடுதல் பெருமையை சேர்த்துள்ளது" என தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 ஆதீன சுவாமிகள் நாளை திறக்கவுள்ள நாடாளுமன்றத்தின் புதிய கட்டட திறப்பு விழாவில் பங்குபெற டெல்லி புறப்பட்டுச் சென்றனர். தருமபுர ஆதீனம், பழனி ஆதீனம், விருத்தாசலம் ஆதீனம், திருக்கோயிலூர் ஆதீனம் என அனைத்து ஆதீன சுவாமிகள் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடதக்கது. மேலும், திறப்பு விழா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி வரலாறு சிறப்புமிக்க புனித செங்கோலை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.