புதுச்சேரியில் கறுப்பு பூஞ்சை நோயால் 20 பேர் பாதிப்பு - pondichery'
புதுச்சேரியில் கறுப்பு பூஞ்சை நோயால் 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் அதிகரித்துவரும் கரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கு சமூக வலைத்தளங்கள் மூலம் பொதுமக்களிடம் பெருந்தொற்று பரவல், அதனைத் தடுப்பதற்கான வழிமுறைகள், கரோனா தடுப்பூசி பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.
இதில் ஒரு பகுதியாக புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் ஃபேஸ்புக் மூலம் கரோனா தொற்று கவனம் பற்றி நேரடி ஒளிபரப்பினை இன்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "முன் களப்ணியாளர்களான செய்தியாளர்கள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கரோனாவால் செய்தியாளர் ரமேஷ் இறந்தது மனவேதனை அளிக்கிறது. கரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு பக்கபலமாக இருக்க வேண்டும் என முதலமைச்சருடன் கலந்து பேசி இருக்கிறேன். செய்தியாளரின் குடும்பத்திற்கும் அரசு ஏதுவான அறிவிப்பை வழங்கும்" என்றார்.
"புதுச்சேரியில் கறுப்பு பூஞ்சை நோய் வேகமாகப் பரவி வருகிறது. இதுவரை அரசு ஊழியர் உட்பட 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனை மாநிலத்தின் குறிப்பிடத்தக்க நோயாக, புதுச்சேரி அரசு அறிவிக்க இருக்கிறது. எங்கு நோய் கண்டறியப்பட்டாலும் அரசுக்கு உடனே தெரிவிக்க வேண்டும்" என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.