ஹைதராபாத்:தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் டூப்ரான் என்ற பகுதியில் இன்று (டிச.04) காலை 8.55 மணியளவில் இந்திய விமானப்படையின் பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஹைதராபாத்திலிருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் இந்த விபத்தானது நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து இந்திய விமானப்படையின் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, “ஹைதராபாத்தில் உள்ள இந்திய விமானப்படை பயிற்சி தளத்திலிருந்து, வழக்கமான பயிற்சி நடவடிக்கைக்காகப் பறந்த பிலட்டஸ் பிசி 7 எம்கே 2 ரக விமானம் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் விமானத்திலிருந்த இரு விமானிகளும் உயிரிழந்து விட்டதாகவும், பொதுமக்கள் உயிர்கள் மற்றும் உடைமைகளுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஹைதராபாத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் உயிரிழந்த விமானிகளுக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,“ஹைதராபாத் அருகே நடந்த இந்த விபத்தால் வேதனை அடைந்தேன். இரண்டு விமானிகள் உயிரிழந்தது மிகுந்த வருத்தமளிக்கிறது. இந்த சோகமான நேரத்தில், என் எண்ணங்கள் இறந்தவர்களின் குடும்பங்களுடன் உள்ளன” என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:தெலுங்கானா தேர்தல் தோல்வி..! முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சந்திரசேகர் ராவ்!