திருவனந்தபுரம்:தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு நாளை (ஏப்.05) சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கேரள தலைமைத் தேர்தல் அலுவலர் திக்காரம் மீனா, "கேரளாவில் உள்ள 140 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட சுமார் 2,180 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அவர்களின் வேட்பு மனுக்கள் சரிபார்க்கப்பட்ட பிறகும், சில வேட்பாளர்கள் தங்களது மனுவை திரும்பப் பெற்ற நிலையில், தற்போது 957 வேட்பாளர்கள் சட்டப்பேரவைத் தேர்தலில் களம் காண்கின்றனர்.
கேரள மாநிலத்தில் ஜனவரி 20ஆம் தேதி வெளியிடப்பட்ட பட்டியலின்படி மொத்தம் இரண்டு கோடியே, 74 லட்சத்து 46 ஆயிரத்து 39 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் ஒரு கோடியே 32 லட்சத்து 83 ஆயிரத்து 724 பேர் ஆண் வாக்காளர்கள். ஒரு கோடியே 41 லட்சத்து 62 ஆயிரத்து 25 பேர் பெண் வாக்காளர்கள். 290 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள்.
இவர்களில் வெளிநாடுகளில் பணிபுரிந்து வருவோரும் அடங்கியுள்ளனர். நாளை நடைபெறவுள்ள தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் மே 2ஆம் தேதி நடைபெறும்" என்றார்.
கேரளாவில் தற்போது ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் இடையே பலத்த போட்டி நிலவுகிறது. இருப்பினும், பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி இவ்விரு கட்சிகளின் வாக்குகளைப் பிரித்து இழுப்பறியை உண்டாக்கும் என்ற கருத்து பரவலாக உள்ளது.