தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 14, 2023, 3:33 PM IST

Updated : Dec 14, 2023, 3:42 PM IST

ETV Bharat / bharat

நாடாளுமன்ற பாதுகாப்பு குளறுபடி - 15 எம்.பிக்கள் இடைநீக்கம்! என்ன காரணம்?

மக்களவையில் தொடர் அமளியில் ஈடுபட்டதாக திமுக எம்.பிக்கள் கனிமொழி, மாணிக்கம் தாக்கூர் உள்பட 14 எம்.பிக்கள் நடப்பு கூட்டத் தொடரில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி டெரீக் ஒ பிரையன் இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ள நிலையில், மொத்தமாக இதுவரை 15 எம்.பிக்கள் நடப்பு குளிர்கால கூட்டத் தொடரில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Etv Bharat
Etv Bharat

டெல்லி :நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடர் கடந்த டிசம்பர் 4ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று (டிச. 13) 2021ஆம் ஆண்டு நாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் நாடாளுமன்றத்தில் அனுசரிக்கப்பட்டது. தொடர்ந்து அவை கூடிய நிலையில், பார்வையாளர்கள் பகுதியில் இருந்த இரண்டு பேர் மக்களவை எம்.பிக்கள் இருப்பிடத்தில் புகுந்து களேபரத்தில் ஈடுபட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பாக நாடளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் பாதுகாப்பு குளறுபடிகளை ஏற்படுத்திய 4 பேரை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். இந்த விவகாரத்தில் 6 பேருக்கு தொடர்பு இருப்பதாக டெல்லி போலீசார் தெரிவித்து உள்ள நிலையில் 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ள நிலையில், தலைமறைவான இருவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து மக்களவையில் மறுஅறிவிப்பு வரும் வரை பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார். இந்நிலையில் இன்று (டிச. 15) வழக்கம் போல் 11வது நாள் நாடாளுமன்றம் கூடியது. அவை கூடியது முதலே மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பிக்கள், பாதுகாப்பு குளறுபடிகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் பதிலளிக்கக் கோரி தொடர் அமளியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே அவை பணிகளுக்கு இடையூறு விளைவுக்கும் வகையில் தொடர் அமளியில் ஈடுபட்டதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரீக் ஒ பிரையன் மாநிலங்களவையில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து, மக்களவையில் தொடர் அமளியில் ஈடுபட்டதாக திமுக எம்.பிக்கள் கனிமொழி, மாணிக்கம் தாக்கூர், காங்கிரஸ் எம்.பிக்கள் 5 பேர் என மொத்தம் 14 உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். மாநிலங்களவை திரிணாமுல் எம்.பியையும் சேர்த்து நடப்பு கூட்டத் தொடரில் மொத்தம் 15 எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

திமுக எம்.பி.க்கள் கனிமொழி, மாணிக்கம் தாகூர், எஸ் வெங்கடேசன், பென்னி பெஹனன், வி.கே.ஸ்ரீகண்டன், எம்டி ஜாவேத், பி.ஆர்.நடராஜன், கே சுப்ரமணியம், எஸ்.ஆர்.பார்த்திபன், டி.என் பிரதாபன், ஹிபி ஈடன், ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ் மற்றும் டீன் குரியகோஸ் ஆகிய 14 பேர் நடப்பு நாடாளுமன்ற கூட்டம் முழுவதும் இடைநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். தொடர்ந்து அவை நாளைக்கு (டிச. 15) ஒத்திவைக்கப்பட்டது.

இதையும் படிங்க :நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் விவகாரம்; 8 பாதுகாப்புப் பணியாளர்களை சஸ்பெண்ட்!

Last Updated : Dec 14, 2023, 3:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details