மைசூரு (கர்நாடகா):உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அதிவேக விரைவு ரயிலான வந்தே பாரத்தை, நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த பெட்டித் தொழிற்சாலையில் (ICF) தயாரிக்கப்பட்ட இந்த விரைவு ரயிலில் பயணிகளை கவரும் வகையில் பல்வேறு வசதிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
மற்ற விரைவு ரயில்கள் தனது, அடுத்தப் பயணத்திற்கு புறப்படுவதற்கு அதிக நேர இடைவெளி எடுத்துக் கொள்ளும் நிலையில், வந்தே பாரத் ரயில் குறைவான நேர இடைவெளியில் மறுமார்க்கத்தில் சேவையை வழங்கி வருகிறது. அந்த குறைவான நேரத்தில் ரயில்களை சுத்தப்படுத்துதல் போன்ற பணிகள் அவசியமாக காணப்படுகிறது. இந்நிலையில் 14 மினிட்ஸ் மிராக்கள் (14 Minutes Miracle) என்ற திட்டத்தின் கீழ் வந்தே பாரத் ரயில்கள் சுத்தம் செய்யப்படுகின்றன.
சென்னை - மைசூரு - சென்னை செல்லும் வந்தே பாரத் ரயிலுக்கு 14 மினிட்ஸ் மிராக்கள் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. 16 பெட்டிகளைக் கொண்ட இந்த ரயிலை, 14 மினிட்ஸ் மிராக்கள் திட்டத்தின் மூலம் சரியாக 14 நிமிடங்களில் சுத்தம் செய்து முடிக்கப்பட்டது. முன்னதாக, வந்தே பாரத் ரயிலை சுத்தம் செய்வதற்கு குறைந்தது 30 முதல் 45 நிமிடங்கள் வரை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த துப்புரவு பணி எவ்வாறு நடக்கிறது?: 14 மினிட்ஸ் மிராக்கள் திட்டத்தின் மூலம் ரயிலை சுத்தம் செய்வதற்கு, 48 பணியாளர்களும், 3 மேற்பார்வையாளர்களும் (Supervisors) நியமிக்கப்பட்டு உள்ளனர். மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒரு பிரிவினர் ரயில் பெட்டிக்குள் இருக்கும் குப்பைகளை அகற்றுதல், ஜன்னல் கண்ணாடியை சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொள்கின்றனர்.