டெல்லி:இந்திய - வங்கதேச எல்லையில், மேற்கு வங்க மாநிலத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றித்திரிந்த சீன நாட்டைச் சார்ந்த நபரை எல்லைப் பாதுகாப்புப்படை காவல் துறையினர் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் 1300 இந்திய சிம் கார்டுகளை உள்ளாடைகளில் வைத்து சீனாவிற்கு கடத்திச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் தெரிவித்த உயர் அலுவலர்கள் கைதுசெய்யப்பட்ட நபரின் பெயர் ஜுன்வே ஹன் என்றும், அவரை குலாப்கஞ்ச் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
ஜுன்வே ஹன்னிடம் இருந்து சீனா நாட்டுடைய பாஸ்போர்ட், வங்கதேச விசா, லேப்டாப், 2 செல்போன்கள், சிம்கார்டுகள், பென்டிரைவர்கள், 5 பணப்பரிவர்த்தனை இயந்திரங்கள், 2 ஏடிஎம் கார்டுகள், அமெரிக்க டாலர், வங்கதேச டாக்கா, மற்றும் இந்திய ரூபாய்கள் கைப்பற்றப்பட்டன.
கிடைத்த ஆதாரங்களின் படி, கைது செய்யப்பட்டவரான ஜுன்வே மற்றும் அவரது மனைவி மீது ஏராளமான வழக்குகள் உத்தரப்பிரதேச மாநில காவல் துறையினரால் பதியப்பட்டது அறிய வருகிறது. அவரது பங்குதாரர் சன் ஜியாங் அண்மையில் கைதாகியிருப்பதாகவும், அவர் மீதும் ஏராளமான வழக்குகள் பதியப்பட்டுள்ளதும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து எல்லைப் பாதுகாப்புப் படை காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஜுன்வே இதுவரை நான்கு முறை இந்திய வந்துள்ளதாகவும், அப்போது இந்திய சிம் கார்டுகளை தனது உடைகளில் வைத்து மறைத்து சீனாவிற்கு எடுத்துச் சென்றதும் தெரியவந்தது.
அதேபோல அந்த சிம் கார்டுகளை வைத்து, இந்திய மக்களின் வங்கிக்கணக்குகளை ஹேக் செய்து, வங்கிப் பரிவர்த்தனையில் மோசடியில் ஈடுபட்டதும் விசாரணையில் உறுதியாகியுள்ளது. பிடிபட்ட ஜுன்வே மீது பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இன்று 44ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்