அமிர்தசரஸ்: ஒமைக்ரான் பரவல் காரணமாகப் பல்வேறு நாடுகள் பன்னாட்டு விமான போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்தியாவில் கரோனா பாதிப்பு, ஒமைக்ரான் பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 90 ஆயிரம் பேருக்கு பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
நோய்த் தொற்றுப் பரவலைத் தடுக்க கரோனா கட்டுப்பாடுகளைத் தீவிரமாக நடைமுறைப்படுத்த மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. விமான நிலையங்களிலும் பயணிகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இத்தாலியின் ரோம் நகரிலிருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் விமான நிலையத்திற்கு வந்த 179 பயணிகளில் 125 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டதாக அமிர்தசரஸ் விமான நிலைய இயக்குநர் வி.கே. சேத் தெரிவித்தார்.