போபால்: கடந்த 2022 செப்டம்பர் 17, பிரதமர் மோடியின் பிறந்தநாள் அன்று நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட 8 சிவிங்கி புலிகள் (5 பெண் மற்றும் 3 ஆண்), பிரதமரால் மத்தியபிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் திறந்து விடப்பட்டது. இந்த நிலையில், தற்போது தென்னாப்பிரிக்காவில் இருந்து 12 சீட்டாக்கள் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
இதன்படி தென்னாப்பிரிக்காவில் இருந்து 7 ஆண் மற்றும் 5 பெண் என மொத்தம் 12 சீட்டாக்கள் இந்திய விமானப்படை விமானம் மூலம் மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள குவாலியருக்கு இன்று (பிப்.18) காலை 10 மணிக்கு கொண்டு வரப்பட்டன. இதனையடுத்து இவை ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவுக்கு நண்பகல் 12 மணிக்கு கொண்டு செல்லப்படுகிறது. பின்னர் அரை மணி நேரம் அவைகள் தனிமைப்படுத்தப்பட உள்ளது.
இதற்காக 10 தனிமைப்படுத்தப்பட்ட அறைகள் தயாராக உள்ளதாக குனோ தேசிய பூங்காவின் இயக்குனர் உத்தம் ஷர்மா கூறியுள்ளார். இந்த 12 சிவிங்கி புலிகள் மத்தியபிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் மற்றும் மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் ஆகியோர் திறந்து வைக்க உள்ளனர். முன்னதாக மத்திய அரசின் சீட்டாக்களை மறுஅறிமுகம் செய்யும் திட்டத்திற்காக இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.