தெஸ்பூர் : மன் கி பாத் வேண்டாம் மணிப்பூர் கி பாத் வேண்டும் என மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த 11 வயது இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் சிறுமி பிரதமர் மோடி கோரிக்கை விடுக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகம் பேரால் பகிரப்பட்டு வருகிறது.
மணிப்பூரில் கடந்த மே மாதம் முதல் மெய்தியின மக்களிடையே கலவரம் வெடித்து வருகிறது. ஏறத்தாழ 3 மாதங்கள் கடந்தும் வன்முறைச் சம்பவங்கள் ஓய்ந்த பாடு இல்லை. நாள்தோறும் கலவரச் சம்பவங்களால் மாநிலமே போர்க் களம் போல் காட்சி அளிக்கிறது. பொருளாதாரத்தில் முன்னேறிய மெய்தி இன மக்களுக்கு மெய்தியின அந்தஸ்து வழங்கக் கூடாது என வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
அதில் இருந்து கடந்த மூன்று மாதங்களாக மணிப்பூர் மாநிலத்தில் கலவரச் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன. கலவரச் சம்பவங்களில் சிக்கி 170க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததாக தகவல் கூறப்பட்டு உள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து, பாதுகாப்பு தேடி முகாம்களில் வசித்து வருகின்றனர்.
மூன்று மாதங்களாக நீடித்து வரும் கலவரத்தைக் கட்டுப்படுத்த மாநில அரசு போராடி வருகிறது. கடந்த மே மாதம் மெய்தியினப் பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு சாலையில் ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
பெண்கள் மீதான வன்கொடுமைகளுக்குப் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனிடையே கடந்த ஜூலை 20ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், மணிப்பூர் விவகாரம் குறித்தும், மெய்தியின பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவங்கள் குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டன.
இருப்பினும் மணிப்பூர் விவகாரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் கொடுப்பார் எனத் தெரிவிக்கப்பட்டது. மணிப்பூர் கலவரம் தொடர்பாக எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் விவாதிக்கத் தயார் என நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
இதை ஏற்றுக் கொள்ளாத எதிர்க்கட்சிகளின் கூட்டணி நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்தனர். இதனிடையே கலவரம் பாதித்த மணிப்பூர் நகரங்களுக்கு இரண்டு நாள் பயணமாக சென்ற எதிர்க்கட்சிகள் கூட்டணியின் 21 பேர் கொண்ட பிரதிநிதிகள் குழு, வன்முறையால் பாதித்த மக்களை சந்தித்து பேசினர்.
மேலும் மாநிலத்தில் அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்கக் கோரி மணிப்பூர் ஆளுநருக்கு கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றினார். பிரதமர் மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சி தங்களுக்கு வேண்டாம் என்றும் மணிப்பூர் கி பாத் வேண்டும் என மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலாரான 11 வயது சிறுமி கோரிக்கை விடுத்து உள்ளார்.
மணிப்பூர் மெய்தியினத்தை சேர்ந்தவர் 11 வயது இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் சிறுமி லிசிப்ரியா கங்குஜம். தன் ட்விட்டர் பக்கத்தில், அன்புள்ள பிரதமர் நரேந்திர மோடிஜி, உங்கள் மன் கி பாத்தை நாங்கள் கேட்க விரும்பவில்லை. நாங்கள் மணிப்பூர் கிபாத் கேட்க விரும்புகிறோம். நாங்கள் உண்மையில் இறந்து கொண்டிருக்கிறோம்.
மணிப்பூர் மாநிலத்தை உடைக்க நினைக்கும் பயங்கரவாத படைகளின் தலையீட்டைக் கண்டித்து இம்பாலில் இன்று மாபெரும் போராட்டம் நடந்தது. இதில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு உள்ளனர். மணிப்பூர் என்ற ஒரே மாநிலத்தில் நாங்கள் ஐக்கியமாகி உள்ளோம். எங்களை ஒன்றிணைத்தமைக்கு நன்றி" என்று பதிவிட்டு உள்ளார். சிறுமியின் ட்விட்டர் பதிவு தற்போது அதிகம் பேரால் பகிரப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க :பாகிஸ்தானில் அரசியல் கட்சி கூட்டத்தில் வெடிகுண்டு தாக்குதல்... 35 பேர் பலி, 200 பேர் படுகாயம்!