வைஷாலி (பிகார்): பிகார் மாநிலம், வைஷாலி மாவட்டத்தின் ஹாஜிபூர் பகுதியில் செயல்பட்டு வரும் பால் பண்ணையில், சனிக்கிழமை (ஜூன் 24) இரவு நிகழ்ந்த அம்மோனியா வாயு கசிவு விபத்தில், ஒருவர் உயிரிழந்து உள்ளார்.
100க்கும் மேற்பட்டோர் பாதிப்பு அடைந்து உள்ள நிலையில், 35 பேர் சதார் மருத்துவமனையிலும், எஞ்சியோர் மற்ற தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த வாயு கசிவு, பால் பண்ணையைச் சுற்றி உள்ள 4 கிலோ மீட்டர் பரப்பளவிற்குப் பரவி உள்ளதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
உயிரிழந்தவர் யார் என்று அடையாளம் காணப்படாத நிலையில், அவர் ராஜ் ஃபிரெஷ் பால் நிறுவனத்தின் ஊழியர் என்பது மட்டும் தெரிய வந்துள்ளது. மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்து, வாயு கசிவிற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர். இந்தப் பால் பண்ணையின் அருகே, மக்கள் குடியிருப்புப் பகுதி உள்ளதால், அப்பகுதியில் உள்ள பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
ராஜ்புட் காலனி பகுதியில் இருந்து, இந்த வாயு கசிவு நிகழ்ந்து உள்ளது. மாவட்ட நிர்வாகம், அடுத்த 20 நிமிடங்களில், வாயு கசிவை கட்டுக்குள் வந்தபோதும், 100க்கும் மேற்பட்டோர், இதில் பாதிக்கப்பட்டனர். மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து, துரித செயல்பாட்டு குழுவும், சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு உள்ளது.
வாயு கசிவு நிகழ்ந்த இடத்தில் வைஷாலி மாவட்ட நீதிபதி ஜஸ்பால் மீனா, காவல்துறை எஸ்.பி. ரவி ரஞ்சன் குமார் மற்றும் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் ஆய்வு செய்து, மீட்புப் பணிகளை முடுக்கி விட்டு உள்ளனர்.