Live:டி.இமான் பிறந்தநாள் கொண்டாட்டம்..!இயக்குநர் பார்த்திபனின் டீன்ஸ் பட சாதனை விழா.. நேரலை! - உலக சாதனை யூனியன்
Published : Jan 24, 2024, 11:46 AM IST
|Updated : Jan 24, 2024, 12:38 PM IST
சென்னை: இயக்குநர் பார்த்திபன் தமிழ் சினிமாவில் வித்தியாசமான படங்களை இயக்கி தனக்கென தனி இடம் பிடித்தவர். இவரது முந்தைய படமான 'இரவின் நிழல்' திரைப்படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட நான் லீனியர் (Non linear) படம் என்ற கின்னஸ் சாதனை படைத்தது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருந்தார். மேலும் இப்படத்தில் இடம்பெற்ற 'மாயவா தூயவா' பாடலுக்காக பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு தேசிய விருது கிடைத்தது.
இந்த நிலையில் தற்போது குழந்தைகளை மையமாக கொண்ட சாகசங்கள் நிறைந்த த்ரில்லர் படம் ஒன்றை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு 'டீன்ஸ்' (TEENZ) என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். காவ்மிக் ஆரி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் முதல்முறையாக சென்சார் சான்றிதழுடன் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் இசையமைப்பாளர் இமானின் பிறந்தநாள் மற்றும் இயக்குநர் பார்த்திபன் இயக்கத்தில் இமான் இசையமைத்துள்ள டீன்ஸ் (TEENZ) படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை உலக சாதனை யூனியன் அங்கீகரித்துள்ளதை கொண்டாடும் வகையில் நிகழ்ச்சி ஒன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்று வருகிறது.