சென்னை: இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்துள்ள தமிழக வீரர் குகேஷ் சிங்கப்பூரிலிருந்து விமானம் மூலம் இன்று (டிச.16) சென்னை வந்த உலக செஸ் சாம்பியன் குகேஷ்க்கு விமான நிலையத்தில் தமிழ்நாடு அரசு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து குகேஷ் சென்னை முகப்பேரில் உள்ள அவரது பள்ளிக்கு அழைத்து செல்லப்பட்டார். பள்ளி நிர்வாகம் சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து குகேஷ் தனது தாய், தந்தையுடன் அமர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார்.
எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி
அப்போது குகேஷ் கூறுகையில், ''உலக சாம்பியன்ஷிப் ஆவது என்னுடைய சிறுவயது கனவு.. அந்த கனவை நினைவாக்கிவிட்டு எனது வீட்டுக்கு வருவதில் சந்தோஷமாக உள்ளது. நான் வீட்டிற்கு வந்து இரண்டு மணி நேரம்தான் ஆகிறது.. உலக சாம்பியன் பட்டம் பெற்றிருப்பது தமிழ்நாட்டிற்கும், இந்தியாவுக்கும் எவ்வளவு பெருமையாக உள்ளது என்பதை பார்க்க எனக்கு சந்தோஷமாக உள்ளது. எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. இனி வீட்டில் இருக்கும் நேரத்தில் மகிழ்ச்சியாக இருப்பேன். இந்த போட்டிகளில் நிறைய ஏற்றத்தாழ்வுகள் இருந்தன. வேறு மாதிரியான எமோஷன் இருந்தது. 14 ஆவது சுற்றில் வெற்றி பெறும்போது மிகவும் உணர்வுபூர்வமாக இருந்தது.
இலக்கு சரியாக இருக்க வேண்டும்
எதை செய்தாலும் அதை மகிழ்ச்சியுடன் செய்ய வேண்டும். செஸ் ஒரு சிறந்த விளையாட்டு.. அதில், நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.. செஸ் மீதுள்ள காதலால் என்னுடைய போட்டிகளை அந்த உணர்வோடு விளையாடுவேன். இலக்கு சரியாக இருந்தால் வெற்றி சரியாக இருக்கும். 14 ஆவது சுற்று சற்று சாதகமாக இருக்கும் என்று நினைத்தேன்.
அதற்கு தயாராகவே நான் இருந்தேன். உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை முதல் முறையாக ஆடுகிறேன் என்பதால் சற்று நடுக்கம் இருக்கும் என்று எனக்கு தெரியும். நிறைய நல்ல முடிவுகளை நான் எடுக்கவில்லை என்றாலும் நல்லது நடக்கும் என்று நினைத்தேன்.