சேலம்: ஈர நிலங்களைப் பாதுகாப்பது மூலம் பல்லுயிர் வளங்கள் மற்றும் கலாச்சாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஆண்டுதோறும் பிப்ரவரி 2ஆம் தேதி உலக ஈர நில தினம் கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு, சேலம் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி, மாவட்ட வன அலுவலர் காஷ்யப் ஷஷாங்க் ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், இந்த நிகழ்ச்சியில் ஈர நிலங்கள், ஈர நிலங்களின் பிரிவுகள், ஈர நிலங்களின் பயன்கள் மற்றும் ஈர நிலங்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து மாணவ மாணவிகளுக்கு விளக்கினர்.
அப்போது பேசிய சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, "இயற்கையைப் பாதுகாக்கும் கடமை அனைவருக்கும் உள்ளது. எனவே மாணவர்கள் மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகளை மட்டுமே படிக்க ஆசைப்படாமல், இயற்கையைப் பாதுகாக்கும் பறவை ஆராய்ச்சி, வன அலுவலர் போன்ற படிப்புகளைப் படிக்க ஆர்வம் செலுத்த வேண்டும்" என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.