திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம், மேலச்செவல் அருகே உள்ள செல்விபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் உதயகுமார் மற்றும் இசக்கிதுரை. இவர்கள் இருவரும் அப்பகுதியில் ஒரே தெருவில் வசித்து வருகின்றனர். உதயகுமார் வீட்டின் கழிவுநீர் இசக்கிதுரை வீட்டின் வழியாகச் செல்வதாகத் தெரிகிறது. இது தொடர்பாக, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில், உதயகுமார் தனது காரை இசக்கிதுரை வீட்டின் அருகே நிறுத்தியதாகவும், அதிலும் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. இந்த மோதல் இரு குடும்பத்தினர் இடையேயான மோதலாக மாறியுள்ளது. நேற்று இரவு (ஜன.23) இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் உதயகுமார் தரப்பைச் சேர்ந்த பூபதி, உஷா உள்ளிட்ட நான்கு பேரை இசக்கிதுரை, சங்கர பாண்டியன், பிரியா உள்ளிட்ட ஐந்து பேர் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியதாகத் தெரியவருகிறது. இதில், உதயகுமாருக்கு இடுப்பில் படுகாயம் ஏற்பட்டது.
இந்த நிலையில், உதயகுமார் தரப்பினர் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் பதில் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதில், இசக்கிதுரை தரப்பினருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. அந்தவகையில், இருதரப்பையும் சேர்ந்த 9 பேரும் சிகிச்சைக்காகத் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று நள்ளிரவில் அனுமதிக்கப்பட்டனர். இதில் உதயகுமாருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்றவர்கள் லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக, முன்னீர்பள்ளம் போலீசார் உதயகுமார் தரப்பைச் சார்ந்த 4 பேர் இசக்கிதுரை தரப்பைச் சேர்ந்த 4 பெண்கள் உள்ளிட்ட ஐந்து பேர் என மொத்தம் 9 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஒரு சமூகத்தைச் சேர்ந்த இருதரப்பினர் இடையே கழிவுநீர் செல்வதில் ஏற்பட்ட தகராறு அரிவாள் வெட்டில் முடிவடைந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதோடு, திருநெல்வேலி மாவட்டத்தில் மீண்டும் அரிவாள் கலாச்சாரம் தொடங்கி விட்டதோ? என்ற அச்சத்தைப் பொதுமக்கள் இடையே ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:திமுக - அதிமுக மோதல்; வேலூரில் மணல் கொள்ளை, கல்குவாரிகளில் முறைகேடு என மாறிமாறி குற்றச்சாட்டு!