தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பள்ளிக்கரணை ஆணவக்கொலை; இளம்பெண் எடுத்த விபரீத முடிவு.. இறுதியாக எழுதிய கடிதம் சிக்கியது! - pallikaranai Honor killing

Chennai Suicide: சென்னையில் ஆணவக்கொலையால் உயிரிழந்த இளைஞரின் மனைவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Chennai Suicide
சென்னை தற்கொலை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 23, 2024, 2:56 PM IST

Updated : Apr 23, 2024, 4:47 PM IST

சென்னை:சென்னையை அடுத்த பள்ளிக்கரணை அம்பேத்கர் பகுதியைச் சேர்ந்த கோபி என்பவரின் மகன் பிரவீன் (26). இவரும், பள்ளிக்கரணை ஜல்லடையான் பேட்டை சாய் கணேஷ் நகர் பகுதியைச் சேர்ந்த ஷர்மிளா (24) என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

ஆனால், இருவரும் இருவேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களது காதலுக்கு ஷர்மிளாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், பெற்றோரின் எதிர்ப்பை மீறி, கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக இருவரும் சென்னை பெரியார் திடலில் சுயமரியாதை திருமணம் செய்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த ஷர்மிளாவின் அண்ணன் தினேஷ் என்ற குட்டி அப்பு (23), அவரது நண்பர்கள் சித்தாலப்பாக்கத்தைச் சேர்ந்த விஷ்ணுராஜ் (25), ஸ்டீபன்குமார் (24), பள்ளிகரணையைச் சேர்ந்த ஜோதிலிங்கம் (25), ஸ்ரீராம் (18) ஆகியோருடன் சேர்ந்து பிரவீனை ஆணவக்கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, இந்த ஆணவக்கொலை மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இச்சம்பவம் தொடர்பாக பள்ளிக்கரனை காவல்துறை வழக்குப்பதிவு செய்து, தினேஷ் உட்பட 5 பேரை கைது செய்தனர். மேலும், தற்போது இந்த வழக்கின் விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த வழக்கில் முறையாக விசாரணை நடைபெறாததாகவும், இதனால் ஷர்மிளா கடும் மன உளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி பள்ளிக்கரணையில் அவர் தங்கி இருந்த கணவர் பிரவீன் வீட்டில் ஷர்மிளா தற்கொலை செய்ய முயன்றுள்ளார். இதனைப் பார்த்த வீட்டில் இருந்தவர்கள் ஷர்மிளாவை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால், அவர் உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், 8 நாட்கள் சிகிக்சையில் இருந்த ஷர்மிளா, நேற்று (திங்கட்கிழமை) மாலை 7 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து, பிரவீனின் ஆணவக்கொலை தொடர்பாக அவரது குடும்பத்திற்கு சட்ட உதவிகள் செய்து வரும் வருண் என்பவர் கூறுகையில், "பள்ளிக்கரணை காவல் துறையினர் தொடர்சியாக இந்த ஆணவக்கொலை விவகாரத்தில் முழுவதும் கொலையாளிகளுக்குச் சாதகமாக நடந்து வருகின்றனர்.

குறிப்பாக, பிரவீன் கொலை செய்யப்பட்ட பின்னர் போடப்பட்ட முதல் தகவல் அறிக்கையில், பிரவீன் தந்தையின் கையெழுத்து போலியாக ஆங்கிலத்தில் போடப்பட்டுள்ளது. பிரவீன் தந்தைக்கு ஆங்கிலமே தெரியாது. அப்படி இருக்க, அவரால் எப்படி ஆங்கிலத்தில் கையெழுத்து போட முடியும்? இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய விசாரணை நடந்தபோது, ஷர்மிளா காவல்துறையால் மிரட்டப்பட்டு உள்ளார்.

மேலும், முக்கிய குற்றவாளியான ஷார்மிளாவின் பெற்றோர் மற்றும் மூத்த அண்ணன் ஆகியோர், இந்த வழக்கில் சேர்க்கப்படவில்லை. இந்த வழக்கின் ஆவணங்களை காவல்துறையினர் ஷர்மிளா தரப்புக்கு வழங்கவில்லை. இந்த ஆணவப் படுகொலையில் காவல்துறை ஒரு தலைபட்சமாக செயல்பட்டதால், தனது கணவர் கொலைக்கு நீதி கிடைக்காமால் போய்விடும் என கடும் மன உளைச்சலில் இருந்த ஷர்மிளா, இந்த தற்கொலை முடிவை எடுத்துள்ளார்" எனக் குற்றம் சாட்டினார்.

இவ்வாறு தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அதில் அவர் கூறியிருப்பதாவது, “என்னால் கணவர் பிரவீன் இல்லாமல் இருக்க முடியவில்லை, சாகப் போறேன். என் சாவுக்கு காரணம் என் அப்பா துரை குமார், அம்மா சரளா அண்ணன்கள் நரேஷ், தினேஷ் இவர்கள் தான்.

என் பிரவீனை என்னிடமிருந்து பிரித்து விட்டார்கள். அவன் தான் எனக்கு எல்லாம். அவன் தான் வேணும். இன்னைக்கு, நானும் என் பிரவீன் கிட்ட போறேன். என் உயிரை என் கிட்ட இருந்து பிரித்து, என்னை வாழ விடாமல் பண்ணிட்டாங்க, பிரவீன் எங்க போனாலும், நானும் போவேன். இப்போ அவனை சாக அடிச்சுட்டாங்க. அவன் இல்லாத இந்த வாழ்க்கை எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்” என கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:உயர் பதவியில் இருந்துகொண்டு இவ்வாறு பேசலாமா? - பிரதமர் மோடிக்கு ஈபிஎஸ் கண்டனம்! - Edappadi Palanisamy

Last Updated : Apr 23, 2024, 4:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details