தென்காசி: 2024 நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஏழு கட்டங்களாக இந்தியா முழுவதும் நடைபெறவுள்ளது. இதில் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுவதால், தேர்தல் களம் தமிழ்நாட்டில் சூடுபிடித்துள்ளது. அந்த வகையில், தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப் போட்டி நிலவுவதால், கட்சிகள் அனைத்தும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
அதிமுக கூட்டணியில், புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி தென்காசி தொகுதியில் களம் காண்கிறார். இந்நிலையில், அவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை புன்னையாபுரம், சொக்கம்பட்டி, கடையநல்லூர், இடைகால், கண்மணியாபுரம், மங்களபுரம் ஆகிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, அங்குள்ள மகளிரிடம் குறைகளைக் கேட்டறிந்து, அதன் பின்னர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அவரிடம் மக்கள், பேருந்துகள் அப்பகுதிகளில் சரிவர நிறுத்தப்படுவதில்லை எனவும், மகளிர் உரிமைத்தொகை பாதி நபர்களுக்கு மட்டுமே கிடைத்துள்ளதாகவும், தண்ணீர் பிரச்னை இருந்து வருவதாகவும் குற்றம் சாட்டினர். இதையடுத்து, பிரச்சாரத்தில் ஈடுபட்ட வேட்பாளர் கிருஷ்ணசாமி, ஆளும் கட்சியான திமுக அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை கொடுப்பதாகச் சொல்லி இருந்தது. அந்த தொகை உங்களுக்கு கிடைத்ததா?”
அப்போது, "திமுகவிற்கு வாக்களித்தால் ஓட்டு போடும் உங்களுக்கு ஒன்றும் கிடைக்காது. இந்தப் பகுதியில் நான் ஆறாவது முறையாக போட்டியிடுகிறேன். இந்தப் பகுதியில் பேருந்து நிறுத்தப்படுவதில்லை, தண்ணீர் வசதி இல்லை என பல குறைகளை நீங்கள் கூறியிருக்கிறீர்கள். நான் வெற்றி பெற்றால், இந்தப் பகுதியில் உள்ள குறைகள் கண்டிப்பாக தீர்க்கப்படும். மேலும், திமுக உங்களுக்கு 200 ரூபாய் கொடுத்து ஓட்டு போடச் சொல்வார்கள்.