சென்னை: நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. கோவை உள்ளிட்ட கொங்கு மாவட்டங்களில் அதிமுகவே இதுவரை அதிக வெற்றி பெற்று வந்தது.
கடந்த 2006 தேர்தலில் ஆட்சி அமைத்தபோது கூட, கோவை மாவட்டத்தில் ஒரே இடத்தில் மட்டுமே திமுக வெற்றி பெற்றது. ஜெயலலிதா இறப்பிற்கு பின்னர் பாஜக கூட்டணியோடு 2021 தேர்தலில் அதிமுக போட்டியிட்ட போது, கோவை மாவட்டத்தில் திமுகவால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை.
இதனால் கொங்கு பகுதி அதிமுவின் கோட்டை என்றே கருதப்பட்டு வந்தது. ஆனால், கடந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக-பாஜக கட்சிகள் தனித்து போட்டியிட்டன. இதில் திமுக மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து, லோக்சபா தேர்தலுக்கு முன்பு சிறுபான்மையினரின் வாக்குகளை குறிவைத்து அதிமுக, பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறியது.
அண்ணாமலை தலைமையிலான பாஜக, பாமக, அமமுக போன்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்திருந்தாலும், அவற்றிற்கு கொங்கு பகுதியில் ஓட்டு வங்கி இல்லாததால் தனது தனிப்பட்ட ஓட்டை நம்பியே களம் இறங்கியது. இதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவையில் போட்டியிட்டது அக்கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.
அண்ணாமலை வெற்றிக்காக வெளியில் இருந்தும் ஆட்கள் வந்து தேர்தல் பணி செய்தனர். இது தவிர, பொள்ளாச்சி தொகுதியில் வசந்தராஜன், திருப்பூரில் ஏ.பி.முருகானந்தம், நீலகிரியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் களம் இறங்கினர். இது பாஜவிற்கு நல்ல பலனைக் கொடுத்துள்ளது.
அதன் எதிரொலியாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் பாஜக அதிமுகவை பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. பொள்ளாச்சி தொகுதியில் ஏறக்குறைய அதிமுகவிற்கு இணையான வாக்குகளை பாஜக வேட்பாளர்கள் பெற்றுள்ளனர். திருப்பூர் தொகுதியிலும் கணிசமான வாக்குகளை பாஜக பெற்றுள்ளது. இதன் காரணமாக, கொங்கு பகுதியில் அதிமுக தனது செல்வாக்கை இழந்திருப்பது உறுதியாகியுள்ளது.
அதற்கு காரணம், அதிமுகவில் சரியான ஒருங்கிணைப்பு இல்லாதது, அதிமுக தலைமை வெற்றி பெற்றால் யாரை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பார்கள் என்ற கேள்வியும், ஒரு வேளை அதிமுக கூட்டணி வெற்றி பெற்றவுடன், மீண்டும் பாஜகவிற்கு ஆதரவு அளிக்கக்கூடும் என சிறுபான்மை மக்கள் சிந்தித்ததால் அவர்களின் வாக்குகள் அதிமுகவிற்கு வரவில்லை, அதுபோல் அருந்ததியின மக்களின் வாக்குகள் அதிமுகவிற்கு அப்படியே வந்து சேரும், கவுண்டர் சமுதாய வாக்குகள் அதிமுகவிற்கு தான் என்ற தவறான கணக்கு, அதிமுகவின் சரிவிற்கு காரணம் என கூறப்படுகிறது.