நாமக்கல்:நாமக்கல் பேருந்து நிலையம் எதிரில் ஓட்டல் வைத்து நடத்தி வருபவர் ஜீவானந்தம் (32). இவரது கடைக்கு கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி நாமக்கல் அருகே உள்ள கொசவம்பட்டியைச் சேர்ந்த தனியார் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் பகவதி (20) சிக்கன் பிரியாணி சாப்பிட்டு உள்ளார்.
தொடர்ந்து, 7 சிக்கன் ரைஸ் பொட்டலம் வாங்கிக் கொண்டு, வீட்டில் உள்ள தனது தாயார் நதியா (40), இதனைத்தொடர்ந்து தேவராயபுரத்தில் வசித்து வரும் தாத்தா சண்முகநாதன் (67) வீட்டிற்குச் சென்று அங்கு தாத்தா மற்றும் குடும்பத்தினருக்கு கொடுத்து உள்ளார். இதற்கிடையே சிக்கன் ரைஸ் சாப்பிட்ட நதியா, சண்முகநாதன் ஆகியோருக்கு மட்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், மீதமுள்ளவர்கள் சிக்கன ரைஸ் சாப்பிடவில்லை.
இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த நதியா, சண்முகநாதன் ஆகிய இருவரையும் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, செயற்கை சுவாசம் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தனர். முன்னதாக, சிகிச்சைக்கு வந்த இருவரும் வாயில் நுரை தள்ளியபடி வந்ததாக கூறப்படுகிறது.
எனவே, அவர்களுக்கு உணவு ஒவ்வாமையால் பிரச்சினை ஏற்பட்டு இருக்க வாய்ப்பு குறைவு எனவும், சாப்பாட்டில் விஷம் கலந்து இருக்க வாய்ப்பு இருக்கலாம் எனவும் மருத்துவமனை டாக்டர் குழுவினர் காவல்துறையினருக்கு தெரிவித்துள்ளனர். இதேபோல், இந்த ஓட்டலில் கடந்த 30ஆம் தேதி சுமார் 100 பேர் உணவருந்தியதாக கூறப்படுகிறது. ஆனால், அவர்களில் 2 பேருக்கு மட்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டதால், உணவு பாதுகாப்புத்துறையினருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது.
அதாவது உணவில் எவ்வித குறைபாடும் இருக்க வாய்ப்பு இல்லை என தெரிய வந்துள்ளது. இதற்கிடையே நேற்று முன்தினம் (புதன்கிழமை) ஓட்டலில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் உமா, சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கு சீல் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, ஓட்டலுக்கு உணவு பாதுகாப்புத் துறையினர் சீல் வைத்தனர். மேலும், சிக்கன் ரைஸ் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் உமா போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அவர்களும் சிக்கன் ரைஸ் உணவு மாதிரியை எடுத்து , சேலம் உணவு பகுப்பாய்வு கூடத்துக்கு அனுப்பினர். மேலும், கல்லூரி மாணவர் பகவதி மற்றும் ஓட்டல் உரிமையாளர் ஜீவானந்தம் ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். இதற்கிடையே உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த கூலித்தொழிலாளி சண்முகநாதன், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விசாரணையில் திருப்பம்:உணவு மாதிரியின் பகுப்பாய்வு முடிவில் உணவில் விஷம் கலந்து இருப்பதும் உறுதியானது. இதனையடுத்து, போலீசாரின் பார்வை கல்லூரி மாணவர் பகவதியிடம் திரும்ப, பகவதியைப் பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பகவதி போலீசாருக்கு அளித்த வாக்குமூலத்தில், தனது கல்லூரியில் உடன் பயிலும் மாணவி ஒருவரை காதலித்ததாகவும், அதுமட்டுமின்றி திருமணமான பெண் ஒருவருடனும் உறவில் இருந்ததாக கூறியுள்ளார்.