சென்னை:17-வது நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் வரும் ஜூன் 16ஆம் தேதி நிறைவு பெறுகிறது. இதனைத் தொடர்ந்து 18-வது நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களை தேர்வு செய்யும் தேர்தல் ஏப்.19 முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று கடந்த மார்ச் 16ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்த வகையில், தமிழகத்திலும், புதுச்சேரியிலும் ஒரே கட்டமாக நாளை (ஏப்.19) நடைபெறுகிறது.
தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதியிலும் 950 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். தமிழகத்தில் 6 கோடியே 23 இலட்சத்து 33 ஆயிரத்து 925 வாக்காளர்களும், புதுச்சேரியில் 10 இலட்சத்து 26 ஆயிரத்து 699 வாக்காளர்களும் நாளை வாக்களிக்க உள்ளனர். தேர்தலுக்காக கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த அனல் பறக்கும் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்வடைந்த நிலையில், வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை முழுவீச்சில் செய்து வருகிறது.
இந்த நிலையில், வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் வேறு எந்தெந்த ஆவணங்களைக்கொண்டு வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. வாக்காளர் அடையாள அட்டையை அளிக்க இயலாத வாக்காளர்கள் அவர்களின் அடையாளத்தை மெய்பிக்க பின்வரும் மாற்று புகைப்பட்ட அடையாள ஆவணங்களில் ஒன்றை காண்பிக்க வேண்டும்.
- ஆதார் அட்டை
- நிரந்தர கணக்கு எண் அட்டை (Pan Card)
- மாற்று திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை
- மத்திய அரசின் தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை
- புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சலக கணக்குப் புத்தகங்கள்
- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அட்டை
- மத்திய, மாநில அரசுகள் அல்லது பொதுத்துறை நிறுவனங்கள் வரையறுக்கப்பட்ட நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள்
- ஓட்டுநர் உரிமம் (Driving license)
- கடவுச்சீட்டு (Passport)
- தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை
- ஓய்வூதிய ஆவணம்
- நாடாளுமன்ற, சட்டமன்ற பேரவை, சட்டமன்ற மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கபட்டுள்ள அலுவலக அடையாள அட்டை